tamilnadu

திருப்பூர் முக்கிய செய்தி

திருமங்கலம் வாக்குச்சாவடியில் அரசு அலுவலர்கள் ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவாக செயல்பட்டனர்

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கூட்டத்தில் குற்றச்சாட்டு

திருப்பூர், மே 11 - காங்கேயம் அருகே திருமங்கலம் வாக்குச்சாவடியில் அரசு அலுவலர்கள் ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவாக செயல்பட்டனர் என மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கூட்டத்தில் குற்றம்சாட்டப்பட்டது.ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவிலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி தமிழகம், புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளில் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 13 வாக்குக்சாவடிகளில் வரும் 19ஆம் தேதியன்று மறுவாக்குப்பதிவு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன் ஒருபகுதியாக ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் திருமங்கலம் வாக்குச்சாவடி எண் 248-ல் மறுவாக்குப்பதிவு நடைபெறுவது குறித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் ஆலோசனைக்கூட்டம் வெள்ளகோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு திமுக இளைஞரணிச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் தலைமை வகித்தார். வெள்ளகோவில் திமுக நகரச் செயலாளர் முத்துக்குமார் வரவேற்றார். திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் இல.பத்மநாபன், திருப்பூர் புறநகர் மாவட்ட மதிமுக செயலாளர் ஆர்.டி.மாரியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் ஈரோடு மக்களவைத் தொகுதியின் வேட்பாளர் அ.கணேசமூர்த்தி பேசும்போது, இந்த மறுவாக்குப்பதிவிலும் அதிக அளவிலான வாக்குகளைப் பெறும் வகையில் வாக்குச்சாவடி எண் 248க்கு உட்பட்ட வாக்காளர்களை வீடு, வீடாகச் சந்தித்து வாக்குகளைச் சேகரிக்க வேண்டும். மத்தியிலும், மாநிலத்திலும் நடைபெறும் ஆட்சியின் போக்கை மக்கள் நன்றாக அறிந்துள்ளனர். எந்த சூழ்ச்சியும் நம் வெற்றியைத் தடுக்க முடியாது. அனைவரும் ஒருங்கிணைந்து இந்த மறுவாக்குப்பதிவை சுமுகமாக நடத்திட வேண்டும்” என்றார்.இக்கூட்டத்தில் பங்கேற்ற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வாக்குச்சாவடி முகவர்கள் பேசுகையில், வாக்குச் சாவடி எண் - 248-ல் கடந்த ஏப்.18ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றபோது, நியமிக்கப்பட்ட அரசு அலுவலர்கள் ஆரம்பத்தில் இருந்தே கவனக்குறைவாகவே செயல்பட்டனர். மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வாக்குச் சாவடி முகவர்களுக்கும், வாக்காளர்களுக்கும் போதிய ஒத்துழைப்பை வழங்கவில்லை. வாக்குப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்தும் இயல்பான நடைமுறை குறித்தும் வாக்காளர்களுக்கு எடுத்து சொல்லவில்லை. மாதிரி வாக்குகள் மற்றும் வாக்காளர்கள் அளித்த வாக்குகள் ஆகியவற்றின் கூட்டுத்தொகை பொருந்தி வராததற்கு இதுவே காரணம்” என்றனர்.முடிவில் வெள்ளகோவில் நகர மதிமுக செயலாளர் ஆர்.பி.ராம்குமார்நன்றி தெரிவித்தார். 


திருப்பூர் அருகே 10ஆம் வகுப்பு மாணவி தற்கொலை 

திருப்பூர், மே 11-திருப்பூர் அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் விரக்தி அடைந்த மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையை அடுத்த மைக்கேல்பாளையம் வடக்கு வீதியை சேர்ந்தவர் அருளானந்தம். இவருடைய மனைவி பாத்திமா (37). மகள் ஞானதர்ஷினி (16). அருளானந்தம் திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த சாமந்தாங்கோட்டை பகுதியில் குடும்பத்துடன் தங்கி, அங்குள்ள தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து வேலை செய்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள ஒரு அரசு பள்ளியில் ஞானதர்ஷினி பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி இருந்தார். கடந்த 29-ந்தேதி பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு வெளியானது. இதில் ஞானதர்ஷினி தேர்வில் வெற்றி பெற்றிருந்தார். ஆனால் குறைந்த மதிப்பெண்கள் மட்டுமே வாங்கி இருந்தார். இதனால் விரக்தியடைந்த அவர் வீட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி விழுந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உடல்நிலை தேறியதையடுத்து கடந்த 5-ந்தேதி ஞானதர்ஷினியை பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.இந்நிலையில் 8-ந்தேதி மீண்டும் உடல்நிலை மோசமானதால் அவர் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞானதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருமுருகன்பூண்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூர் அருகே பத்தாம் வகுப்பு தேர்வில் மதிப்பெண் குறைவாக வாங்கியதால் மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.