திருப்பூரில் மே தின விழாவை எழுச்சியோடு கொண்டாட முடிவு
திருப்பூர், ஏப். 29 -திருப்பூர் மாவட்டத்தில் மே முதல் நாள் தொழிலாளர் உரிமைத் திருநாளான மே தின விழாவை எழுச்சியோடு கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அன்று காலை திருப்பூர் மாவட்டம் முழுவதும் குடியிருப்புப் பகுதிகளில் செங்கொடி ஏற்றும் நிகழ்ச்சிகளை அந்தந்த பகுதி கிளைகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாலை நேரத்தில் மாவட்டத்துக்கு உட்பட்ட ஏழு மையங்களில் மே தின சிறப்புப் பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.இதன்படி திருப்பூர் மாநகரில் அரிசிக்கடை வீதியில் நடைபெறும் மே தினப் பொதுக் கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், ஏஐடியுசி சார்பில் முன்னாள் எம்எல்ஏ எம்.ஆறுமுகம் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகின்றனர்.உடுமலையில் கே.ரங்கராஜ் (சிஐடியு), என்.சேகர் (ஏஐடியுசி) ஆகியோரும், ஊத்துக்குளியில் சி.சுப்பிரமணியம் (சிஐடியு), ஜி.ரவி (ஏஐடியுசி), அவிநாசியில் எம்.ராஜகோபால் (சிஐடியு), எஸ்.செல்வராஜ் (ஏஐடியுசி), பல்லடம் ஆர்.குமார் (சிஐடியு), எஸ்.ரவிச்சந்திரன் (ஏஐடியுசி) மற்றும் தாராபுரத்தில் கே.காமராஜ் (சிஐடியு), பொங்கலூரில் எஸ்.ஆர்.மதுசூதனன் (சிஐடியு) ஆகியோர் பங்கேற்று மே தின சிறப்புரை ஆற்றுகின்றனர்.மே தினத்தன்று மாலை 5 மணிக்கு திருப்பூரில் அவிநாசி சாலை மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டத் தலைமை அலுவலகம் முன்பாக மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடி ஏற்றி வைக்கிறார்.உழைப்பாளர் உரிமைத் திருநாளான மே தின விழாவை எழுச்சியோடும், உற்சாகத்தோடும் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயிகள், விவசாயத்தொழிலாளர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்கள் பங்கேற்கும்திருவிழாவாக கொண்டாடுமாறும், பொதுக்கூட்டங்களில் பெருந்திரளாக குடும்பத்தோடு கலந்து கொள்ளும்படியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு சார்பில் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
செக் மோசடி செய்த வழக்கில் இருவருக்கு ஓராண்டு சிறை
தாராபுரம், ஏப். 29-தாராபுரத்தில் செக் மோசடி செய்த இருவேறு வழக்குகளில் ஆசிரியர், வியாபாரிக்கு தலா ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.தாராபுரத்தை அடுத்துள்ள தேர்ப்பட்டி பச்சாபாளையம் அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிபவர் கோவிந்தராஜ் (50). இவர் குடும்ப செலவுக்காக மூலனுர் நொச்சிபாளையத்தை சேர்ந்த சம்பத் என்பவரிடம் 20.11.2011 அன்று ரூ.10 லட்சம் கடன் வாங்கியிருந்தார். இதன்பின் கோவிந்தராஜ் ரூ.10 லட்சத்திற்கு 20.12.2013 தேதியிட்ட வங்கி காசோலையை சம்பத்திடம் வழங்கியுள்ளார். இதனை வங்கி கணக்கில் செலுத்தியபோது பணம் இல்லை என வந்துள்ளது. இது தொடர்பாக கோவிந்தராஜ் மீது தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் சம்பத் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சசிக்குமார் கோவிந்தராஜிக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து திங்களன்று தீர்ப்பு கூறினார்.இதேபோல், திருப்பூர் வள்ளியம்மை நகரைசேர்ந்தவர் வியாபாரி பழனிசாமி (52). இவர் வியாபார தேவைக்காக குண்டடம் ஜோத்தியம்பட்டியை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் 25.5.2011அன்று ரூ.6 லட்சத்து 20 ஆயிரம் கடன் பெற்றார்.பெற்ற கடனுக்கான அதே தொகையை காசோலை முலம் பழனிச்சாமி திருப்பி கொடுத்துள்ளார். இதனைதனது வங்கி கணக்கில் செந்தில்குமார் செலுத்தியபோது பணம் இருப்பு இல்லை என தெரியவந்தது. இதையடுத்து தாராபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் செந்தில்குமார் வழக்கு தொடுத்தார். வழக்கை விசாரித்த நீதிபதி சசிக்குமார் வியாபாரி பழனிச்சாமிக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பு கூறினார்.
சேவூரில் ரூ.6 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்
அவினாசி, ஏப். 29-சேவூரில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் ரூ.6 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.அவினாசியை அடுத்த சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் திங்களன்று நடைபெற்ற நிலக்கடலை ஏலத்தில் 300 மூட்டைகள் வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.5,400 முதல் ரூ 5,710 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ 5,100 முதல் ரூ. 5,350 வரையிலும், மூன்றாவது ரக நிலக்கடலை ரூ 4,800 முதல் ரூ 4,900 வரையிலும் ஏலம் போனது.மொத்தம் ரூ 6 லட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது. இதில் 7 வியாபாரிகள், 13 விவசாயிகள் பங்கேற்றனர்.
சாலை விபத்தில் இருவர் பலி
தாராபுரம், ஏப். 29-தாராபுரத்தில் நடந்து சென்றவர்கள் மீது வாகனங்கள் மோதியதில் இருவர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் அடுத்துள்ள பொன்னாபுரம் கிராமம், நாராணாபுரம் ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி ரத்தினசாமி (70). இவர் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து ரத்தினசாமி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரத்தினசாமி சிகிச்சைக்காக கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்தை நேரில் பார்த்த தாராபுரம்காந்திபுரத்தை சேர்ந்த சிவக்குமார் அளித்த புகாரின்பேரில் தாராபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.இதேபோல், தாராபுரம் அருகே உள்ள காங்கயம்பாளையத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி முருகன். இவரது மனைவி பச்சையம்மாள் (60). இவர்தாராபுரம் உடுமலை சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த கார் பச்சையம்மாள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த பச்சையம்மாள் ஆம்புலன்ஸ் முலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே பச்சையம்மாள் உயிரிழந்தார். இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் அலங்கியம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.