tamilnadu

img

சூறாவளி காற்றால் பல ஆயிரம் வாழைகள் நாசம்

ஈரோடு, மே 14-ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் வீசிய சூறாவளி காற்றால் பல ஆயிரம் வாழைகள் முற்றிலும் சாய்ந்து பலகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஈரோடு மாவட்டம் கோபி, நாகதேவன்பாளையம், அய்யம்புதுார், தாளவாடி, சின்னகுறவன்பாளையம், அந்தியூர், வெள்ளித்திருப்பூர், பவானி, கவுந்தப்பாடி, ஓடத்துறை உட்பட பல கிராமங்களில் 15 ஆயிரம் ஏக்கருக்குமேல் வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. செவ்வாழை, பச்சை வாழை, நாட்டுப்பழம், கதளி, தேன்வாழை, பூவன் பழம் போன்றவை சாகுபடி செய்யப்பட்டது. இந்நிலையில்,ஆண்டு பயிரான வாழை வளர்ந்து பூத்த பருவத்திலும், குலை தள்ளியநிலையிலும் பல்வேறு கட்டங்களில் வாழை வளர்ந்து நின்றது. கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் வீசிய கடுமையான சூறாவளி காற்றில் பல நூறு ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழைகள் முற்றிலும் சாய்ந்தும், ஒடிந்தும் நாசமாகிஉள்ளது. இவற்றை மீண்டும் சீரமைப்பதும், வருவாய் பெறுவது என்பதும் சாத்தியமற்றதாகும்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், ஒரு வாழைக்கு கருணை வைத்து, உரமிட்டு, நீர் பாய்ச்சி, கம்பு மூலம் முட்டுக்கொடுத்து கட்டி, பராமரிப்பு செய்ய 200 ரூபாய்க்கு மேல்செலவாகும். ஆண்டு பயிர், மென்மையான பயிர் என்பதால் பராமரிப்பு செலவு அதிகம். இச்சூழலில், கடந்த நான்கு நாட்களுக்கு முன் வீசிய சூறாவளி காற்றில், பலஆயிரம் வாழை மரங்கள் விழுந்து நாசமாகி விட்டது. பலர் வாழைக்கு காப்பீடு செய்துள்ளனர். வறட்சிக்கு மட்டுமே காப்பீட்டு தொகைவழங்கப்படும். சூறாவளி, வெள்ளம், நோய் தாக்கத்தால் வாழை பாதித்தால், அதற்கு நிவாரணம் கிடையாது என்பது விதியாகும். இதனால், இவ்விவசாயிகளுக்கு ஒரு ரூபாய் கூட கிடைக்காத நிலைஏற்பட்டுள்ளது என்றனர்.இருப்பினும் தங்களது பாதிப்பை பதிவு செய்யும் வகையில், அந்தந்த பகுதி வட்டாட்சியர் மற்றும் வருவாய் அலுவலர் ஆகியோரை அழைத்து சென்று தங்களது வாழைக்கான பாதிப்பை, விவசாயிகள் பதிவு செய்துள்ளனர். இதற்கே பெரும் தொகையை இழந்துள்ளனர். எனவே, இதனை பேரிடராக கருதி முதல்வரின் நிவாரண நிதியில் இருந்து சிறப்பு ஒதுக்கீடாக விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். காப்பீட்டுக்கான இழப்பீடு வழங்குவதை தவிர்க்காமல், அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.