tamilnadu

புறக்கணிக்கப்பட்டதாலேயே இவர்கள் புனிதர்களல்ல... அ.குமரேசன்

வயது மூப்பின் காரணமாகத்தான் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷிஇருவருக்கும் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு தரப்படவில்லையா அல்லது அவர்களை நரேந்திர மோடி, அமித் ஷா இருவருமாக ஓரங்கட்டுகிறார்களா என்பதெல்லாம் அவர்களுடைய கட்சியின் உள் விவகாரங்கள். ஆனால், இவர்களை விட்டுவிட்டார்களே என்று வருத்தப்படுவதற்கும் ஏதுமில்லை. ஏனென்றால் இன்று இந்தியாவின் மதச்சார்பின்மைத் தளத்தைப் பாதுகாக்க விரும்புகிறவர்கள் மோடிஆட்சிக்கு இன்னொரு பதவிக்காலத்தை வழங்கிவிடக்கூடாது என்பதற்கு என்னென்ன காரணங்களை முன்வைக்கிறார்களோ அந்தக்காரணங்களுக்கெல்லாம் விதை தூவப்பட்டதில்அன்று முன்னணியில் நின்றவர்கள்தான் இந்தஇருவரும். மக்களிடையே, குறிப்பாக இளைஞர்களிடையே, மதவெறி நஞ்சு பரப்பியதில் இவர்களுக்கும் முக்கியப் பங்கு உண்டு.அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக இருந்தவர் ஜோஷி. அவருடைய அந்தப் பதவிக் காலத்தில்தான் பள்ளிப் புத்தகங்களில் மதவாதச் சிந்தனைகளைப் புகுத்துவதற்கான பாடத்திருத்தங்கள் செய்யப்பட்டன. மதச்சார்பின்மையின் பெயரால் பாடப்புத்தகங்களில் தவறான வரலாறுகள் சொல்லப்பட்டு வந்துள்ளன என்று சொல்லத் தொடங்கி,அவற்றைத் திருத்துவதற்கான குழுக்கள் அமைக்கப்பட்டன. அதுவரையில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் (என்சிஇஆர்டி) கீழ் பாடப்புத்தகங்களை, குறிப்பாக வரலாற்றுப் பாடங்களைத் தயாரிப்பதில் உலகம் முழுவதுமுள்ள வரலாற்று அறிஞர்களின் அங்கீகாரத்தைப் பெற்ற ரொமிலா தாப்பர்,பிபின் சந்திரா, இர்பான் ஹபீப், சதிஷ் சந்திரா,ஆர்.எஸ்.சர்மா, அர்ஜூன் தேவ் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டார்கள்.


இப்போது எந்தவொருவரலாற்றுச் சபையிலும் பங்கேற்காத, ஆராய்ச்சிஅறிக்கைகளை அளிக்காத நபர்கள் புதிய பாடநூல்களைத் தயாரித்தார்கள். அவர்களது ஒரேதகுதி, ஆர்எஸ்எஸ் அங்கீகாரம் பெற்றவர்கள் என்பதுதான்.“மார்க்சியவாதிகளும் மெக்காலேவாதிகளும் மதரஸாக்களும் இந்தியமயமாக்கலின் எதிரிகள்,” என்று ஒரு பாடத்தில் சேர்க்கப்பட்டது. மெக்காலே கல்வி முறையைக் கடுமையாக விமர்சிக்கிற மார்க்சியவாதிகளை எவ்வளவு நுட்பமாக முஸ்லிம் பள்ளிகளோடு முடிச்சுப்போடுகிறார்கள்! சிபிஎஸ்இ பள்ளிகளின் 12ம்வகுப்புக்கான அரசியல் கோட்பாடுகள் பற்றியபுத்தகத்திலிருந்து மார்க்சியக் கோட்பாடு பற்றியபாடத்தை அகற்ற ஜோஷி காலத்தில்தான் ஆணையிடப்பட்டது.“நாமெல்லாம் மனுவின் பிள்ளைகள் என்பதால்தான் நாம் மனுஷ்யர் என்று அழைக்கப்படுகிறோம்,” “விஞ்ஞானிகள் தாவரங்களை உயிரற்றவை என்று கருதுகிறார்கள். ஆனால் இந்து தர்மம் தாவரங்களுக்கும் உயிர்இருக்கிறது என்று கூறுகிறது,” “மனு, சத்ருன்ஆகிய நமது உண்மையான இரு மூதாதையர்கள்தான் பூமிக்கு உயிர் தந்தார்கள்,” “முன்புஇந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த திபெத்தில்தான் மனிதன் முதலில் தோன்றினான். அங்கிருந்துதான் நிலமெங்கும் மனிதர்கள் பரவினார்கள். மனிதர்கள் இந்தப் பூமிக்கு வந்து 179 மில்லியன் கோடி, 19 லட்சம், 59 ஆயிரம், 84 ஆண்டுகள் ஆகின்றன,” “ராஜபுத்திர பாரம்பரியம் சார்ந்த ஸதி நாம் பெருமைப்பட வேண்டிய ஒன்று,” …. இப்படி அறிவியலை அவியலாக்கி, வரலாற்றை வறுவலாக்கியபாடக்குறிப்புகள் அனைத்து வகுப்புகளிலும் புகுத்தப்பட்டன.


ஒரு பாடத்தில், “இஸ்லாமியத்தை ஏற்கமறுத்ததால் பாண்டா பைராகியின் தொண்டைக்குள் அவனது மகனின் இதயம் திணிக்கப்பட்டது,” என்ற வரி சேர்க்கப்பட்டது. பள்ளிக் குழந்தைகளின் மனங்களில் மதப்பகைமைத் தீயை மூட்டுகிற வேலை அப்போதே தொடங்கிவிட்டது, அதற்கான அமைச்சகத் தலைமைப் பொறுப்பில் இருந்தவர்தான் முரளி மனோகர் ஜோஷி. இவற்றைக் களையெடுப்பதற்கு உண்மையான அக்கறையுள்ள கல்வியாளர்கள் மிகப்பெரும் போராட்டத்தை நடத்தினார்கள்.வி.பி. சிங் தலைமையிலான அரசு மண்டல்ஆணையத்தின் பரிந்துரைப்படி அரசுப் பணிகளில் இட ஒதுக்கீட்டைக் கொண்டுவந்தபோது, அதை எதிர்த்து ரத யாத்திரையைத் தொடங்கியவர் அத்வானி. அது நாடு முழுவதும் ரத்தம் சிதறவைத்த யாத்திரையாக நடந்தது. அத்வானி அன்றைய தனது ரதயாத்திரைகளின் ஆவேசப்பேச்சுகள் மூலம், பெரியவர்களை மட்டுமல்லாமல், வளரும் பிள்ளைகளையும் குறிவைத்து சிறுபான்மை மக்களுக்கு எதிரான நச்சுக் கருத்துகளைப் புகுத்தினார். பின்னாட்களில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகளில் இளைஞர்களாக வளர்ந்திருந்த அந்தப் பிள்ளைகள் பங்கேற்றார்கள் என்று விளக்க வேண்டியதில்லை.


2002 குஜராத் படுகொலைகள் அரங்கேற்றப்பட்டபோது, மாநில முதலமைச்சர் பொறுப்பிலிருந்த நரேந்திர மோடியை அகற்றிவிடுவது நல்லது என்ற ஆலோசனையைக் கட்சிக்குள் பிரதமர் வாஜ்பாய் முன்வைத்ததாகவும், அத்வானி அதற்குக் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்து மோடியை முதல்வர் பதவியில் தொடரச்செய்ததாகவும் ஒரு தகவல் உண்டு.“மாற்றுக் கருத்துகளைக் கூறுவது தேசவிரோதச் செயல் அல்ல,” என்று, தனக்குத் தேர்தல் வாய்ப்பு மறுக்கப்பட்ட பின் எழுதுகிறார் அத்வானி. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக, ஆட்சியாளர்களை விமர்சித்தவர்களுக்கெல்லாம் தேசவிரோதி, சமூகவிரோதி, பாகிஸ்தான் நேயர், பயங்கரவாத ஆதரவாளர், அர்பன்நக்ஸல் என்ற அடையாள வில்லைகள் மாட்டப்பட்டபோது அவர் மௌனமாகத்தானே இருந்தார்?ஆக, இன்று அந்த முகாமுக்குள் எழுகிற குமுறல்களுக்கு அவர்களுக்கிடையேயான பல்வேறு வேறுபாடுகள் காரணமாக இருக்கலாம். ஆனால் நிச்சயமாக அந்த வேறுபாடு, மதவெறிச் சித்தாந்தம் சார்ந்ததில்லை. ஆகவே புறக்கணிக்கப்பட்டதாலேயே இவர்கள் புனிதர்களில்லை. நாடு என்ற குளத்து நீரில் மதவெறி நஞ்சு கலந்தவர்களை, பதவித் தண்ணீர் இல்லாத காட்டுக்கு அனுப்ப மக்கள்தயாராகிவிட்டார்கள் என்பதில் ஐயமில்லை.