tamilnadu

img

சின்ன வெங்காயம் கொள்முதல் விலை உயர்வு

திருப்பூர், ஏப். 25 -திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு பல மாதங்களுக்குப் பிறகு தற்போது கொள்முதல் விலை ஓரளவு உயர்ந்திருப்பதால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருப்பூர் மாவட்டம் குண்டடம், கொடுவாய், தாராபுரம், குடிமங்கலம் மற்றும் காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் அதிக அளவில் விவசாயிகள் சின்ன வெங்காயம் பயிரிட்டு வருகின்றனர். சின்னவெங்காயம் பயிரிட்டு சுமார் 120 நாட்களில் விளைச்சல் எடுக்கக்கூடிய பயிர் ஆகும். இந்த வட்டாரத்தில் கடந்த டிசம்பர், ஜனவரி மாதம் பயிரிடப்பட்ட சின்ன வெங்காயம் தற்போது அறுவடை நிலைக்கு வந்துள்ளது. எனவே விவசாயிகள் அறுவடைப் பணியைத் தொடங்கியுள்ளனர்.ஒரு ஏக்கருக்கு உழவு, நடவு, அடியுரம், மேல் உரம் இடுதல் என குறைந்தபட்சம் ரூ.30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளனர். எனினும் கடந்த பல மாதங்களாக உற்பத்தி செய்தபோதும் கட்டுப்படியான விலை கிடைக்காமல் விலை இறங்கு முகமாக நீடித்து வந்தது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக காட்டில் அறுவடை செய்யும்போது வியாபாரிகள் கிலோ ரூ.10, ரூ.11 என்ற மிகக் குறைவான விலைக்கு கொள்முதல் செய்து வந்தனர். இந்நிலை நீடித்த காரணத்தால் மாவட்டத்தில் ஏராளமான வெங்காய விவசாயிகள் சாகுபடியை நிறுத்திவிட்டனர்.


கட்டுப்படியான விலை கிடைக்காதது, தரமான விதை கிடைக்காதது, நோய்த் தாக்குதலால் உற்பத்தி பாதிப்பு, சந்தையில் நுகர்வு குறைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சின்ன வெங்காய சாகுபடிப் பரப்பு திருப்பூர் மாவட்டத்தில் மூன்றில் ஒரு பகுதியாகக் குறைந்துவிட்டது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க துணைத் தலைவர் பாலதண்டபாணி தெரிவித்தார்.இந்நிலையில் கடந்த 18ஆம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகு இந்த ஒரு வார காலமாக வெங்காயம் கொள்முதல் விலை அதிகரித்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். குறிப்பாக அண்டை மாநிலங்களில் இருந்து வெங்காய வரத்து குறைந்துவிட்டதுடன், இங்கும் உற்பத்தி அளவு குறைவாக இருக்கும் நிலையில் தற்போது கொள்முதல் விலை அதிகரித்திருக்கிறது என்றும் பாலதண்டபாணி தெரிவித்தார்.இந்நிலையில் கடந்த வாரம் வரை கடும் நஷ்டம் ஏற்பட்டு வந்ததால், அறுவடை செய்த சின்ன வெங்காயத்தை சேமித்து வைத்திருந்த விவசாயிகள் தற்போது விற்பனை செய்யத் தொடங்கி விட்டனர். கடந்த மாதம் ரூ.10 க்கு கொள்முதல் செய்யப்பட்ட வெங்காயம் தற்போது கிலோ ரூ.29 வரை காட்டிலேயே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். ஏக்கருக்கு சராசரியாக 7 டன் உற்பத்தியாகும் சின்ன வெங்காயத்துக்கு தற்போது கிடைக்கும் கொள்முதல் விலை கட்டுப்படியாகக் கூடியதாக இருக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். சின்ன வெங்காயத்தின் கொள்முதல் விலை ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வரும் நிலையில், உற்பத்தி செய்த சின்ன வெங்காயத்தைப் பாதுகாக்க குண்டடம் பகுதியில் சேமிப்பு கிடங்கு ஒன்றை அமைத்தால் உற்பத்தி அதிகமாகும் காலங்களில் சேமித்து வைத்து, பற்றாக்குறை ஏற்படும்போது விற்பனை செய்தால் விலையும் நிலையாக இருப்பதோடு, விவசாயிகளும் நஷ்டம் அடையாமல் இருக்க முடியும். எனவே இப்பகுதியில் வெங்காய சேமிப்பு கிடங்கை ஏற்படுத்தி தர வேண்டும் என்றும் வெங்காய சாகுபடி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.