இருளர் இன மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
தருமபுரி, மே 20-இருளர் இன மக்களை சொந்தஇடத்திலிருந்து காலிசெய்யக்கோரி துப்பாக்கியை காட்டி மிரட்டிய வனத்துறையினர் மீது உரியநடவடிக்கை எடுக்கக் கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியரிடம் இருளர் இன மக்கள் மனு அளித்தனர்.தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், ஒகேனக்கல் வனப்பகுதியில் வசித்து வந்த இருளர் இன மக்களுக்கு கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட வனத்துறை அலுவலராக இருந்த பால்ராஜ் என்பவரின் முயற்சியால், ஒகேனக்கல் பன்னப்பட்டியில் 20தகர வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இங்கு இருளர் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வனத்துறையைச் சேர்ந்த காளியப்பன், நந்தகுமார் ஆகியோர் இருளர் இன மக்கள் இங்கு குடியிருக்கக் கூடாது வேறு இடத்துக்கு செல்ல வேண்டும் என மிரட்டியுள்ளனர். மேலும், இவர்களை மிரட்டும் வகையில் இருளர் இன மக்கள் வளர்த்த மூன்று நாய்களையும் வனத்துறையினர் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாகவும், நீங்கள்காலிசெய்யவில்லை என்றால்நாயை சுட்டுக் கொன்றதைப்போல் உங்களையும் சுட்டுக் கொன்று விடுவோம் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது.எனவே, நீண்ட காலமாக குடியிருக்கும் எங்கள் வசிப்பிடத்தை விட்டு எங்கும் செல்ல முடியாது. எங்கள் வாழ்விடத்தில் வாழ எங்களை அனுமதித்து எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். மேலும், எங்களை துப்பாக்கியை காட்டி மிரட்டிய சம்மந்தப்பட்ட வனத்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி திங்களன்று பன்னப்பட்டி இருளர் இனமக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.