கோவையில் ரயில்வே பார்சல் அலுவலகம் இடிந்து விழுந்த விபத்தில் 2 பேர் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக கோவை ரயில் நிலையத்தில் உள்ள பார்சல் அலுவலகத்தின் மேற்கூரையும், சுவரும் இடிந்து விழுந்தது.
இதுபற்றிய தகவல் அறிந்து மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி பாலசுப்பிரமணியன் தலைமையில் 50 பேர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விரைந்து வந்த மீட்பு குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கிய 4 பேரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பவளமணி மற்றும் இப்ராகிம் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.