பொள்ளாச்சி, ஏப்.1- பொள்ளாச்சி அருகே வீரல்பட்டி கிராமத்தில் கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அக்கிராம மக்கள் தெற்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.பொள்ளாச்சி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்டது வீரல்பட்டி கிராமம். இக்கிராமத்தில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் மிகப் பெரிய அளவில் கோழிப்பண்ணை அமைப்பதற்கான கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தப் பணிகளுக்கு முறையான கட்டிட அனுமதி பெறாமலும், சுகாதாரத்துறை மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடமும் எந்த அனுமதியும் பெறாமல் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்பகுதியில் கோழிபண்ணை அமைத்தால் சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்பட்டு பொதுமக்களும், கால்நடைகளும் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, இப்பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இதுகுறித்து பலமுறைஊராட்சி மன்ற நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இச்சூழலில், திங்களன்று பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட வீரல்பட்டி கிராம மக்கள் அலுவலக நுழைவாயில் முன்பு அமர்ந்து தர்ணா வில் ஈடுபட்டனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கோழிபண்ணை நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு களைந்து சென்றனர்.