அவிநாசி, ஏப்.25-திருப்பூர் அடுத்த தெக்கலூரில் நடந்த சாலை விபத்தில் கேரள மாநிலத்தை சேர்ந்த ஒருவர் பலியானார்.4 காவலர்கள் படுகாயமடைந்தனர். கேரள மாநிலம், எர்ணாகுளத்தை சேர்ந்த 20 வயது பெண் காணாமல் போன வழக்கின் விசாரணைக்காக கேரள சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் 4 பேர் மற்றும் பெண்ணின் உறவினர்கள் இருவரும் புதனன்று இரவு கேரளாவில் இருந்து ஹைதராபாத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் அவிநாசியை அடுத்த தெக்கலூர் ஆலம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அங்குள்ள மேம்பால தடுப்பு சுவரில் கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெண்ணின் உறவினர் ஹரி நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு உறவினர் வினு கோபால் மற்றும் காவலர்கள் ராஜேஷ், விநாயகம், அருண், அனில்குமார் என 5 பேரும் கோவை தனியார் மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து அவிநாசி காவல்துறையினர் விபத்து குறித்து வழக்குப்பதிவு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.