தருமபுரி, நவ.12- காலமுறை ஊதியம் வழங்க வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று தருமபுரியில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. தமிழகத்தில் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியர்களுக்கு துவக்கத்தில் மதிப்பூதியம், தொகுப்பூதியம் என்ற பெயரிலும் தற்போது சிறப்பு கால முறை ஊதியம் என்ற பெயரிலும் ஊதியம் வழங்கப்பட்டு வருகிறது. அதேநேரம், கடந்த 36 ஆண்டுகளாக நிரந்தர மாக செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். உணவு மானியத்தை உயர்த்தி வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளை மூடக்கூடாது என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று தருமபுரியில் கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு துவங்கிய பேரணி கடை வீதி வழியாக சென்று தொலைபேசி நிலையம் முன்பு நிறைவடைந்தது. பின்னர், அங்கு விளக்க கூட்டம் நடைபெற்றது. முன்னதாக, இப்பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சி.எம். நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் ஜி.நாகராஜன் பேரணியை துவக்கி வைத்தார். மாநிலச்செயலாளர் ஆர்.எம்.மஞ்சுளா, மாவட்டச் செயலாளர் சி.காவேரி ஆகி யோர் சிறப்புரையாற்றினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன், மாவட்டச் செய லாளர் ஏ.சேகர், பொருளாளர் கே.புகழேந்தி ஆகியோர் வாழ்த்திபேசினர். நிறைவாக, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் தேவகி நன்றி கூறினார்.