தாராபுரம், ஜூன் 2--காங்கேயம் ரப்பர், ஆயில் மில்களால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் தாராபுரம் துணை ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.தாராபுரம் துணை ஆட்சியர் அலுவலகத்தை காங்கேயம் வட்டத்தை சேர்ந்த ராசாத்தாவலசு வருவாய் கிராமம் மற்றும் வேப்பம்பாளையம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் முற்றுகையிட்டு துணை ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, ராசாத்தாள்வலசு சிட்கோ தொழிற்பேட்டையில் பழைய ஆயிலை மறு சுழற்சி செய்து விற்பனை செய்யும் நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் முறையாக மறுசுழற்சி செய்யப்படுவதில்லை. திடக்கழிவுகளை மண்ணில் புதைத்தும், புகைபோக்கி மூலம் காற்றில் பரப்பவும் செய்கின்றன. வேப்பம்பாளையம் சிட்கோ தொழிற்பேட்டையில் செயல்படும் டயர் நிறுவனத்தில் பழைய டயர்களை அழித்து புதிய ரப்பர் சீட்டுகள் தயாரிக்கிறார்கள். இந்நிறுவனத்தை விவசாய பூமியில் அமைத்துள்ளனர். பிஏபி வாய்க்காலுக்கு மிக அருகில் அமைந்துள்ளனர். திடக்கழிவுகளை குழிவெட்டி அதில் கொட்டி மூடிவிடுகின்றனர். இதனால் விவசாய பாசனத்திற்கு செல்லும் நீரில் கரைத்து விடுகின்றனர். இந்த இரண்டு நிறுவனங்களினால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சுமார் பலருக்கு ஆஸ்துமாவும், கேன்சர் நோயும் ஏற்பட்டுள்ளது. எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் என்பதால் தீவிபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிறுவனங்களுக்கு அருகிலேயே மத்திய அரசின் பவர்கிரிட் பிரிவும், துணை மின்நிலையமும் செயல்படுகிறது. பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் இந்த ஆலைகளை ஆய்வு செய்து மூட நடவடிக்கை எடுக்கவேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மனுவை பெற்றுக்கொண்ட துணை ஆட்சியர் பவன்குமார், மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் உள்பட துறை அதிகாரிகளுடன் கள ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பொதுமக்களிடம் உறுதி அளித்தார்.