கோவை, மே 11–அம்பேத்கர் கல்வி, வேலைவாய்ப்பு இலவச பயிற்சி மையத்தின் சார்பில் பொதுத்துறை நிறுவனங்களின் போட்டித் தேர்வைஎதிர்கொள்ளும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி முகாம் சனியன்று கோவையில் துவங்கியது. வங்கி உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேருவதற்கு பல்வேறு போட்டித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டி தேர்வை மாணவர்கள் எதிர்கொள்ள பல தனியார் நிறுவனங்கள் லட்சக்கணக்கான ரூபாய்கட்டணமாகப் பெற்று மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இதனால் சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் இந்த கட்டணத்தை செலுத்த முடியாமல் வீட்டில் இருந்தபடியே தேர்வுக்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் கடந்த பத்தாண்டுகளாக அம்பேத்கர் கல்வி, வேலை வாய்ப்பு பயிற்சிமையத்தின் சார்பில் போட்டித்தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கான இலவச பயிற்சி முகாமை நடத்தி வருகின்றனர். இந்த பயிற்சி மையத்தின் மூலம் நூற்றுக்கணக்கான மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று வங்கி உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் அமர்ந்துள்ளனர். இந்நிலையில் வருகிற மாதங்களில் பல்வேறு பொதுத்துறை வங்கிகள் ஆயிரக்கணக்கான பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் சாதாரண ஏழை, எளிய மாணவர்கள் போட்டித்தேர்வில் வெற்றி பெற்று பணியில் சேரவேண்டும் என்கிற நோக்கத்தோடு தற்போது இலவச பயிற்சி முகாம் துவக்கப்பட்டது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் மற்றும் அம்பேத்கர் கல்வி வேலை வாய்ப்பு பயிற்சி மையம் இணைந்து நடத்தும் இலவச பயிற்சிமுகாமின்துவக்க விழா கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தாமஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் கோவை மாவட்ட செயலாளர் மகேஷ்வரன் தலைமையில் நடைபெற்ற விழாவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார். இதில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞானம், கனரா வங்கி அதிகாரிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முதன்மை மேலாளர் இளங்கோ, தேசிய பார்வையற்றோர் இணையத்தின் தலைவர் சதாசிவம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முன்னதாக பயிற்சி முகாமின் நோக்கங்கள் குறித்து ஒருங்கிணைப்பாளர் கணேஷ் அறிமுகவுரை நிகழ்த்தினார். இப்பயிற்சிமுகாம் சாந்தி திரையரங்கம்எதிரே உள்ள அரசு ஊழியர் சங்கத்தின் மேல் மாடி கூட்டரங்கத்தில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.