தானோர் உதவியும் செய்யாப் போதும்
தனக்கவர் செய்கின்ற உதவிக் கீடாய்
மண்ணையும் விண்ணையும் கொடுத்தால் கூட
மற்றதற்கு ஒருபோதும் ஆகா ஈடாய்!
காலத்தில் செய்கின்ற உதவி எல்லாம்
கணக்கிடின் உலகத்தின் மிகப்பெ ரியதாம்!
ஞாலத்தில் பயன்கருதா உதவி ஆய்ந்தால்
நன்மைக் கடலின் மிகப்பெ ரியதாம்!
தினையளவு செய்கின்ற நன்றியைச் சான்றோர்
தித்திக்கப் பனையளவாய் கொள்வார் அன்றோ!
குணவளவில் உயர்ந்தோர்க்கு செய்யும் நன்றி
குறித்திடுமே உதவியதன் அளவை நன்றே!
மாசற்றார் உறவை மறக்க வேண்டாம்
துன்பத்தின் துணையை துறக்க வேண்டாம்!
மாசுடைத் துன்பத்தைப் போக்கி யோரை
மனங்கொள் ஏழேழு பிறவி கண்டாம்!
நன்றியை மறப்பது நல்லதல்ல தீமையை
நாளில் மறப்பதே நல்ல தென்பார்!
துன்பத்தை மறந்திட அவர்செய் நன்றி
துணையாக நினைத்தாலே போது மென்பார்.
எந்நன்றி மறந்தாலும் பிழைத்தி டலாமே
செய்நன்றி மறந்தார்க்கு உய்வே இல்லை!
எந்நாளும் செய்நன்றி போற்றி வாழ்வோம்
ஏற்றமிகு வாழ்க்கையில் தொய்வே இல்லை!