முருகபாலன் - வளர்மதி இவர்களின் திருமணம் வித விதமான அதிர்வலைகளை அந்தப் பகுதியில் ஏற்படுத்தத் தவறவில்லை. வெறும் வாய்களை மெல்லும் திண்ணைப் பேச்சு தெருவாசிகளுக்கு அது அவலாய் ஆகிப் போயிற்று. இந்த விசயத்தை ரொம்ப ரொம்ப ஆர்வமாகப் பேசினார்கள். அக்கம் பக்கம் யார் வருகிறார்கள் என்று கூட கவனிக்காமல் அலசி ஆராய்ந்தார்கள். யாராவது இந்த கல்யாண வீட்டாருக்கு வேண்டியவர்கள் வந்துவிட்டால்.. அவ்வளவுதான்… பேச்சை திசை திருப்பினார்கள்… ‘மோடி ஆட்சி சரியில்லை… எடப்பாடிக்கு ஆளத்தெரியல..’ என்று உரையாடலை வேறு தளத்திற்கு மாற்றினார்கள். பஞ்சமா பாதகம் ஒன்றும் இங்கு நடந்து விடவில்லை. முருகபாலன் - வளர்மதி இருவரும் ஒருவருக்கொருவர் ஒருவருக்கும் தெரியாமல் காதலித்து விட்டார்கள். இரண்டு பேர்களும் தக்க சமயத்தில் அவரவர் பெற்றோர்களிடம் காதல் குறித்து தெரிவித்து.. பெற்றவர்களும் முகம் சுளிக்காமல் முறைப்படி பேசி… கலந்துரையாடி காதல் மற்றும் ஏற்பாட்டுத் திருமணமாக இவர்களின் திருமணத்தை நடத்தி வைத்து விட்டார்கள். அவ்வளவுதான்… இந்த சங்கதிக்குத்தான் எட்டு திக்குகளில் இருந்தும் விமர்சனக் குரல்கள் வித்யாசமாக வெளிவந்தன.வளர்மதி பற்றிப் பேசும் போது, அமைதியான பொண்ணு… அடக்க ஒடுக்கமான பிள்ளை.. வேற்று ஆண்கள் யாரிடமும் வீண் பேச்சுப் பேசாதவள்… தெருவிலோ, உள்ளூரிலோ, கல்லூரியிலோ அநாவசியமான அரட்டை அடித்தாள் என்கிற அவப் பெயர் எடுக்காதவள்…முருகபாலன் சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரன்… யாரையும் எளிதில் ஈர்க்க கூடிய திறமைசாலி… அவனது அளவளாவல் பாணியால் உம்மணா முஞ்சிகளையும் உற்ற நண்பர்களாக்கி விடுவான்….. பிறருக்கு உதவும் குணம் கொண்டவன்….இரண்டு பேர்களையும் நன்கறிந்தோர், இவர்கள் மீது இது போன்ற அபிப்ராயங்களுக்கு சொந்தக்காரர்களாகத்தான் இருந்தார்கள்.. இப்படிப்பட்டவர்கள் இணைவதில் தவறென்ன… என்றால் மட்டும்… அது… வந்து… என்ன இருந்தாலும்.. சாதி வேற இல்லையா…? என்று வார்த்தைகளை ஜவ்வாய் இழுத்தார்கள்…. ஆமா இந்த திருமணத்தை ஆதரிப்போரைக் காட்டிலும் எதிர்ப்பவர்களே ஏராளமாகத் தென்பட்டார்கள்.“எதிர்பாராத விபத்து ஒண்ணு நடந்து போச்சு… உங்க உயிரக் காக்க ரத்தம் வேணும்.. உங்க ரத்த வகைக்கு வேற சாதிக்காரரோட ரத்தந்தான் பொறுந்திது… அப்ப என்ன செய்வீங்க… வேறு சாதிங்காரங்கரோட ரத்தத்த செலுத்த வேண்டாம்… எங்க சாதி ஆட்களத் தேடிப் பிடிங்கன்னு சொல்லுவீங்களா…?”
இப்படியொரு கேள்வியைக் கேட்டால்… ‘இது வேற அது வேற’ என்று மழுப்பினார்களே தவிர சரியான பதிலை எதிர்ப்பாளர்கள் யாரும் தரவில்லை.கானல்பிரியன் என்பவர் அந்தத் தெருவில் வசித்து வருகிற கவிஞர். ‘சாதி ஒழிய வேண்டும்’ ‘சாதி வித்யாசம் பார்க்க கூடாது’ ‘பள்ளிக் கூடத்திலேயே சாதி பெயரைக் கேட்க்கக் கூடாது’ என்கிற கருப்பொருளில் புதுக்கவிதை, வசன கவிதை, ஹைக்கூ கவிதை என்று நிறையக் கவிதைகள எழுதிக் குவிப்பவர். வார, மாத ஏடுகளில் இவரது கவிதைகள் அடிக்கடி பிரசுரமாகும். உள்ளூரில் அவ்வப்போது நடைபெறும் இலக்கிய கூட்டங்களில் கவிதைச் சாரல்களால் கவிதைச் சுவைஞர்களை நனையச் செய்வார். இவ்வாறு முற்போக்குப் படைப்புக்களின் முன்னோடியாய்த் திகழ்ந்த இவரால் யதார்த்தத்தில் இந்தக் காதல் கல்யாணத்தை ஜீரணிக்க இயலவில்லை. “என்ன ஒங்க நண்பர் இப்பிடிப் பண்ணிட்டாரு.. பொண்ணு விரும்புச்சுன்னு வேற சாதி பையனுக்குப் பண்ணிக் கொடுத்து… சொந்த சாதிக்காரங்க எதிர்ப்ப சம்பாதிச்சிட்டாரு…”வளர்மதியின் தந்தைக்கு நெருக்கமான தோழரான சீனிவாசனிடம் இப்படியொரு கேள்வியைத் தொடுத்தார் கவிஞர் கானல்பிரியன். சீனிவாசன் நிஜமான முற்போக்காளர். வார்த்தைக்கும் வாழ்க்கைக்கும் இடைவெளிகள் இருக்க கூடாது என்று நினைப்பவர். முடிந்தளவு இடைவெளிகள் ஏற்படாமல் பார்த்துக் கொள்பவர். “என்ன சார்…; சாதி ஒழியணும்னு கவிதை எழுதினாப் போதுமா…? சாதி ஒழிஞ்சிடுமா…? செயல்ல இறங்க வேண்டாமா…? நீங்க எழுதினதோட நின்னுட்டிங்க… நம்ம தோழர் அத செயல்படுத்திக் காட்டிட்டாரு…”“அவரு பொண்ண வேற சாதிப் பையனுக்கு கொடுத்திட்டா மட்டும் சாதி ஒழிஞ்சிடுமா..?”“மாப்பிள்ளைப் பையன் முருகபாலன் மனதுல ஆழமா வேர்விட்டிருந்த சாதிச் செடிய இந்தக் கல்யாணம் மூலம் பிடிங்க எரிஞ்சாச்சில்ல…”“எப்பிடி…?”“முருகபாலன் அவன் சார்ந்த சாதி மீது பற்று மிகுந்தவன் தெரியுமா…? என்னய அண்ணன்னு கூப்பிடுவான்… ஏன் தெரியமா…? நான் அவுங்க சாதியாம்… ஒண்ணோட வயசில அவருக்குப் பையன் இருக்கான்… அவரப் போயி அண்ணன்னு கூப்பிடுறேன்னு யாராவது கேட்டா… அவர் எங்காளு தெரியுமா…? அண்ணன்னு கூப்பிட்டா கோவிச்சுக்கிட மாட்டாருன்னு பதில் கொடுப்பான்… அது மட்டுமில்ல…சுதந்திரப் போராட்டப் போராளி ஒருத்தர் அந்த சாதிக்காரராம்… அவர் பேர்ல இளைஞர் அமைப்புத் தொடங்கி செயல்பட்டு வந்தான்… இதெல்லாம் இந்தக் கல்யாணத்துக்கு பிறகு அவன்ட்ட இருந்து காணாமப் போயிடுச்சு தெரியுமா…?
“அப்பிடியா…?’“ஆமா கல்யாணப் பத்திரிகையில யார் பேர்லயும் சாதி போடல… அந்த சுதந்திரப் போராட்ட போராளி படத்த அவுங்க வீட்டுல இதுவரைக்கும் நடந்த கல்யாணப் பத்திரிகையில போடாம இருந்ததில்ல… ஆனா இந்தப் பத்திரிகைல அவர் படத்தப் போடல… என்னய அவனோட சாதி ஆளுன்னு அண்ணன் கூப்பிட்டவன் இப்ப சார்னு அழைக்க ஆரம்பிச்சிட்டான்… வந்தவுங்களுக்குத் தந்த தாம்பூலப் பையப் பாத்திங்களா…? ஒரு பக்கம் பாரதியார் படம் போட்டு… அவரோட “சாதிகள் இல்லையடி பாப்பா” வரிகள்.. மறுபக்கம் வள்ளுவர் படம் போட்டு ‘அன்பும் அறனும் உடைத்தாயின்” குறள். இதெல்லாம் தூக்கிப் பிடிச்ச சாதிய தூரப் போட்டிட்டான்னு தெரியலையா…?” இந்த மனப்போக்கு முருகபாலனோட நிக்காது… அவுங்க வீட்டுக்குள்ளயும் மெல்ல மெல்லப் பரவும்…
.“…………………………………………………………………………………………………..
”“ஒருவரை ஒருவர் புரிஞ்சு சாதி பத்தி கவலப்படாம காதிலிச்சு கல்யாணம் பண்ணிட்டு இனிமேலும் ‘எங்காளுங்க’ ‘நம்மாளுங்கன்னு’ சொன்னா மனச்சாட்சி உறுத்துமில்லையா..? சாதி விட்டு சாதி கல்யாணம் பண்ற போது இப்பிடித்தான் சாதி அபிமானம் கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சு… அப்பறம் மறஞ்சு போகும்… அதனாலதான் பெரிய பெரிய சீர்திருத்த வாதிகள் எல்லாம் சாதி ஒழிக்கிற மூலிகை சாதி மறுப்புத் திருமணம்னு சொல்லி இருக்காங்க.. சொல்ல வேண்டிய கருத்த சுலபமா சொல்ல இலக்கணத்த ஒதுக்கி வச்சிட்டு புதுக்கவித வசன கவிதன்னு எழுதுறீங்க… அது மாதிரிதான் இதுவும்…. இலக்கியத்தில மரபு மீறும்போது… யதார்த்த வாழ்க்கையில மரப மீறாம சாதியப் பிடிச்சு தொங்கிறது நியாயமா சொல்லுங்க..”சீனிவாசனின் சின்ன சின்ன விளக்கங்கள் கானல்பிரியனின் கடின மனதைக் கரைக்கத் தவறவில்லை. சாதி ஒழிய சரியான மருந்து கலப்பு மணந்தான் என்கிற விதை அவர் மனதுள் விழுந்தது. இந்த திருணமத்திற்கு எதிர் நிலை எடுத்தவரை சீனிவாசனின் இயல்பான உரையாடல், அவரை ஏற்பு நிலைக்கு மாற்றியது.அன்பு மகளின் காதல் திருமணம், அவரால் ஆதரிக்கப்படுகிறது… இவரால் எதிர்க்கப்படுகிறது…. அந்தப் பெரிய மனிதர் தவறாகக் கருதுகிறார்… முக்கியப் பிரமுகர் முகம் சுளிக்கிறார்…. என்பதற்காக வளர்மதியின் அப்பா தேவபாரதி கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளவில்லை…. ஆம் அவர் இடது மனதுக்காரர். அதனால்…..போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரிதூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து செல்வேன்…ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம்ஏற்றால் எடுத்துரைப்பேன் எவர் வரினும் நில்லேன்… அஞ்சேன்…என்கிற கவியரசர் கண்ணதாசன் கவிதை வரிகளை அசைபோட்டபடி கம்பீரமாக வலம் வந்தார்.