பென்னாகரம், மே 7-ஒகேனக்கல்லில் சுற்றுலா வந்த வாலிபரை நாட்டு துப்பாக்கியால் சுட்டு கொன்ற குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.தருமபுரி மாவட்டம், ஜருகு அருகே குரும்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முனுசாமி (28). இவர் கடந்த மே 1ம் தேதியன்று அவரதுஅக்கா மகளுடன் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்துள்ளார். இதன்பின் வீடு திரும்பும்போது சாலையோர வனப்பகுதியையொட்டியுள்ள இடத்தில் வாகனத்தை நிறுத்தி விட்டு தனதுஅக்கா மகளுடன் பேசிகொண்டிருந்துள்ளார். அப்போது, 4 பேர் கொண்ட மர்ம நபர்கள் முனுசாமியை நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டுஅங்கிருந்து தப்பியோடியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஒகேனக்கல் காவல்துறையினர் கொலை மற்றும் அனுமதியின்றி துப்பாக்கி பயன்படுத்தியது ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். மேலும், தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன், பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பாளர் மேகலா ஆகியோர் தலைமையில் 7 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை பிடிக்க தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த கொலை தொடர்பாக ஒகேனக்கல் அருகேயுள்ள அஜ்ஜம்பட்டி, தாசம்பட்டி, கோடுப்பட்டி கிராமங்களை சேர்ந்த 7 பேரை சந்தேகத்தின் பெயரில் பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் திங்களன்று இரவு ஒகேனக்கல் வனப்பகுதியான அம்மாபள்ளம் என்ற பகுதியில் குற்றவாளி என சந்தேகப்படும் செல்வம் என்பவரை சுற்றிவளைத்து சிறப்பு படையினர் கைது செய்தனர். இதன்பின் அவரை ஏரியூர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதைத்தொடர்ந்து செவ்வாயன்று காலை அவரை ஒகேனக்கல் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். இதில் கொலைக்கு அவர் பயன்படுத்திய நாட்டு கள்ளத் துப்பாக்கி, செல்போன் ஆகியவற்றை பதுக்கி வைத்துள்ளதாக தெரிவித்ததை அடுத்து அதனை பறிமுதல்செய்யும் பணியில் தீவிரமாகஈடுபட்டுள்ளனர்.