பொள்ளாச்சி, மே 5-பொள்ளாச்சி அருகே மான் வேட்டையில் ஈடுபட்ட நான்கு பேரை வனத்துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த செமணாம்பதி ,செம்மேடு பகுதிகளில் சிலர் மான் வேட்டையாடியதாக வனத்துறையினருக்கு புகார்கிடைத்தது. இதையடுத்து பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் காசிலிங்கம் தலைமையிலான வனத்துறையினர் விசாரணையில் ஈடுபட்டனர். இதில் செம்மேடு பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் (48), மாரப்பக்கவுண்டன் புதூரை சேர்ந்த தமிழரசன் (38),துரைசாமி (62), பெரிய போதுவை சேர்ந்த சுந்தர்ராஜ் (51) மற்றும் கேரள மாநிலம் நெடும்பாறையைச் சேர்ந்த பிரகாஷ் (29) ஆகியோர் வேட்டையாடியதாக தெரியவந்தது. இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை பாலகிருஷ்ணன், சுந்தர்ராஜ், பிரகாஷ், துரைசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தமிழரசன் என்பவரை தேடிவருகின்றனர்.இந்நிலையில் பாலகிருஷ்ணன் என்பவர் வீட்டிலேயேநாட்டு துப்பாக்கி தயாரிப்பது தெரியவந்துள்ளது. அவர்களிடமிருந்து இரண்டு மான்கொம்பு, நாட்டு துப்பாக்கியில் பயன்படுத்தும் தோட்டாக்கள் 76, இரட்டை குழல் துப்பாக்கி தோட்டாக்கள் 24, 100 கிராம் மருந்து, துப்பாக்கி தயாரிப்பதற்கான உபகரணங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டன.