கோவை, டிச.28- கோவை பகுதியில் ஆன்லைன் மூலம் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக கோவை மாநகர காவல் துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வரப்பெற்றன. இதனைத்தொடர்ந்து ஆன்லைன் லாட்டரி விற்பனையை தடுப்பதற்காக நடவடிக்கைகளை மேற்கொள்ள கோவை மாநகர ஆணையர் சுமித்சரன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில் கோவை சரவணம்பட்டி துணை ஆய்வாளர் சரத்குமார் வெள்ளியன்று கோவை கரட்டுமேடு பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தபோது, அவர்கள் ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்து கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும், அவர்கள் பயன்படுத்திய செல்போனில் அதற்கான தகவல்கள் முழுவதும் பதிவாகியிருந்தது. கையில் டோக்கன்களும் வைத்திருந்தனர். இதன்பின் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்துகையில், அவர்கள் சரவணம்பட்டி ஜி.கே.என் லேஅவுட் பகுதியில் வசிக்கக்கூடிய கார்த்தி (45), சரவணம்பட்டி விநாயகர் கோவில் வீதியல் வசிக்கக்கூடிய கிருஷ்ணகுமார் (25) என்பதும் தெரியவந்தது. இவர்கள் சரவணம்பட்டி முழுவதும் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்டு வருவதும் தெரியவந்தது. இதனைத்தொடர்ந்து இருவரையும் காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.