ஈரானுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், எண்ணெய் விலைகள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு எண்ணெய் விலை உயரக்கூடும் என்று சவூதி இளவரசர் மிரட்டல் விடுத்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 14 ஆம் தேதி, சவுதி அரேபியாவின் மிகப்பெரிய இரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் எண்ணெய் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டு, சர்வதேச அளவில் எண்ணெய் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு ஈரான் தான் காரணம் என்று அமெரிக்காவும், சவுதி அரேபியாவும் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ஏமனில் இருந்து தான் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் கூறியுள்ளது. இந்த சூழலில், ஈரான் மற்றும் சவுதி அரேபியா இடையேயான பகை முற்றத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுதி இளவரசர் முகமது பின் சல்மான், ”ஈரானுக்கு எதிரான உலக நாடுகள் கடுமையான மற்றும் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், உலக நாடுகளின் நலன்களை அச்சுறுத்தும் வகையில், பிரச்சனை விரிவடையும். எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு விலை உயரக் கூடும். இதுவரை இல்லாத, கற்பனை செய்ய முடியாத அளவுக்கு விலை உயர்வு இருக்கும். உலகின் எரிசக்தி விநியோகத்தில் சுமார் 30%, உலகளாவிய வர்த்தக பத்திகளில் 20%, உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4% என அங்கம் வகிக்கிறது. இந்த நிலையில், எண்ணெய் விலை உயர்த்தப்பட்டால், சவுதி மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் மட்டும் அல்லா, ஒட்டு மொத்த உலக நாடுகளின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்படும்” என்று மிரட்டல் விடுத்துள்ளார்.