tamilnadu

img

ஏப்ரல் 23 உலக புத்தகத் தினம்: சிறந்த சமுதாயம் படைத்திட உறுதியேற்போம்-சிபிஎம்

உலக புத்தக தினம் ஏப்ரல் 23 அன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அனைவருக்கும் வாசிப்பு உரிமை, புத்தகங்களின் அவசியம், நூலகங்களின் வளர்ச்சி, படைப்பாளி - பதிப்பாளர் - வாசகர் இணைப்பு, புத்தக வாசிப்பு - பராமரிப்பு - தொகுப்பு, அனைத்து மொழிகளிடையே புத்தகப் பரிமாற்றம் உள்ளிட்ட இலக்குகளை  நோக்கிச் செல்வதன் ஒரு உலகளாவிய இயக்கமாகவே 1996 ஆண்டு ஏப்ரல் 23 நாளில் உலகப் புத்தக தின கொண்டாட்டங்கள் உலகம் முழுவதும் துவங்கியது. உலகப் புகழ்பெற்ற நாடக ஆசிரியர் வில்லியம் சேக்ஸ்பியர் பிறந்தநாளும் நினைவுநாளுமான இந்த நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் தொடங்கிய உலகப்புத்தக தின கொண்டாட்டம் ஆண்டுதோறும் தொடர்கிறது.

அத்தகையதொரு நிகழ்வை ஒரு மாபெரும் பண்பாட்டு நிகழ்வாக, அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கியதொரு உற்சாக நிகழ்வாக நாமும் தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும். வரலாற்றின் தொடர்ச்சியை இன்றைய தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும், அறிவியல் கண்ணோட்டத்தை பரவலாக்கவும் புத்தக வாசிப்பே நமக்கு பெரிதும் உதவிடும். இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளை போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும். எனவே உலக புத்தக தினத்தில் புத்தக வாசிப்பை பரவலாக்கும் முயற்சியை தொடர்வோம். உலக புத்தக தினமான இன்று, படைப்பாளிகள், வாசகர்கள் என அனைவருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உலக புத்தக தின வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.