சென்னை:
பெண்களும் விரும்பினால் பயிற்சி கொடுத்து அர்ச்சகராக்கப்படுவர் என்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரின் அறிவிப்புக்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வரவேற்வு தெரிவித்துள்ளது.இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, மாநிலப் பொதுச்செயலாளர் பி.சுகந்தி ஆகியோர் வெளியிட்டுஉள்ள அறிக்கை வருமாறு:
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த மே 7 ஆம் தேதி பொறுப்பேற்றது. அன்று முதல் பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்ற சில அம்சங்களை முதல் கட்டமாக நடைமுறைப்படுத்தியுள்ளது. மேலும் இந்து சமய அறநிலையத்துறைக்குட்பட்ட கோவில்களில் அனைத்துச்சாதியினரும் அர்ச்சகராகலாம் எனவும்,தமிழில் அர்ச்சனை செய்யலாம் எனவும் ,பெண்கள் அர்ச்சகர்களாக விரும்பினால் அவர்களுக்கும் பயிற்சி கொடுத்து அர்ச்சகர்களாக்கப்படுவர் எனவும் அறநிலையத்துறை அமைச்சர் அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது.
குறிப்பிட்ட சாதியினர் மற்றும் ஆண்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருப்பது என்பது இந்திய அரசியலமைப்பு சட்டம் சொல்லும் சமத்துவத்திற்கு முற்றிலும் எதிரானது. இப்போது அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என அறிவித்தாலும் அதில் ஆண்கள் மட்டுமே இருப்பார்கள் என்ற நிலையே அனைவர் மனக்கண் முன்பும் நிற்கிறது.ஏனெனில் நீதிமன்றமே அனுமதித்தும் பெண்கள் சில கோவில்களுக்குள் இன்றும் செல்ல முடியவில்லை.பெண் என்றால் தீட்டு என்ற அறிவியல் விரோத சனாதன பார்வை அடிப்படையில் பெண்களுக்கு அத்தகைய அனுமதியில்லை. இது வரை பெண்களுக்கு ஆகம விதியின் படி அதற்கான பயிற்சியும் கொடுக்கப்படவில்லை.மரபு,கலாச்சாரம்,பண்பாடு என்ற பெயரில் பெண்கள் கருவறை செல்ல அனுமதிக்கப்படாத சூழலில் ,பெண்களும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு அறநிலையத்துறை சமத்துவத்தை நோக்கை செல்லும் ஒரு நடவடிக்கையாகும்.எனவே அர்ச்சகராக விருப்பமுள்ள பெண்களுக்கு உரிய பயிற்சியளித்து அவர்களையும் முறையாக அர்ச்சகர்களாக நியமிக்க வேண்டும் என்று தமிழக அரசை ஜனநாயக மாதர் சங்கம் கேட்டுக்கொள்கிறது.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.