புதுச்சேரி, மே 25- மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என புதுவை அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. புதுவையில் 2020-2021ஆம் ஆண்டுக்கான உத்தேச மின் கட்டண நிர்ணயம் தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்றது. இந்நிலையில் இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையின்படி வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு 5 பைசாகவும், அதிகபட்சமாக 30 பைசாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தகப் பயன்பாட்டுக்கு குறைந்தபட்சம் யூனிட்டுக்கு 10 பைசாவும், அதிகபட்சமாக 20 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது.
குடிசைத் தொழில் பயன்பாட்டுக்கு யூனிட்டுக்கு குறைந்தபட்சம் 5 பைசாவும், அதிகப்பட்சம் 30 பைசாவாகவும், வீட்டு உபயோகப் பயன்பாட்டுக்கு ரூ. 40 நிரந்த கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 1.50 என்ற பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 2.50இல் இருந்து ரூ. 2.55 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 4.35இல் இருந்து ரூ.4.50 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 5.60இல் இருந்து ரூ. 5.90 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. வர்த்தகப் பயன்பாட்டுக்கு நிரந்தரக் கட்டணம் ரூ. 130ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.50-ல் இருந்து ரூ. 5.60 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 6.50-இல் இருந்து ரூ. 6.65 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 7.20-ல் இருந்து ரூ. 7.40 ஆகவும் அதிகரித்துள்ளது.
குடிசைத் தொழில் பயன்பாட்டுக்கு ரூ.40 நிரந்தரக் கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.1.50 என்ற பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், 101 யூனிட் முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 2.50இல் இருந்து ரூ. 2.55 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ. 4.35இல் இருந்து ரூ. 4.50 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ. 5.60இல் இருந்து ரூ. 5.90 ஆகவும் அதிகரித்துள்ளது. தெருவிளக்குகளை பொறுத்தவரை ஒரு கம்பத்துக்கு நிரந்தர கட்டணம் 110 ரூபாயும், ஒரு யூனிட்டுக்கு ரூ.6.80ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.5.68இல் இருந்து ரூ.4.50ஆக மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
குறைந்த மின் அழுத்த இணைப்பு உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ரூ.130 நிரந்தரக் கட்டணத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.95ம், உயர் மின் அழுத்த (எச்.டி) இணைப்பு உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ரூ.420 நிரந்தக் கட்டணத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.50ம், கூடுதல் உயர் மின் அழுத்த (இ.எச்.டி) இணைப்பு உள்ள தொழிற்சாலைகளின் பயன்பாட்டுக்கு ரூ.480 நிரந்தர கட்டணத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ.5.20ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்த மின் அழுத்த இணைப்பு கொண்ட நீர்த்தேக்க தொட்டிகளின் பயன்பாட்டுக்கு ரூ.150 நிரந்தரக் கட்டணத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.85 ஆகவும், உயர் மின்னழுத்த இணைப்பு கொண்ட இதர பயன்பாட்டுக்கு ரூ.480 நிரந்தரக் க்ட்டணத்துடன் ஒரு யூனிட்டுக்கு ரூ.6.60ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தற்காலிகமான துணை மொத்தக் கட்டணம் 4 சதவீதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைந்துள்ள இந்த புதிய மின் கட்டணம் உயர்வு தொடர்பான கோப்பு இந்த மாதம் அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும், ஒப்புதலுக்கு பிறகு ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிகிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு
ஏற்கனவே மின்சாரதுறையை தனியார் மயமாக்கும் முடிவை எதிர்த்து கட்சியின் சார்பில் புதுச்சேரி பிரதேசம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மின்கட்டண உயர்வு மேலும் மக்களை கடுமையாக பாதிக்கும். பொதுமுடக்கத்தால் வேலையிழந்து வருமானம் இழந்து தவிக்கின்ற மக்கள் தலையில் இந்த கட்டண உயர்வை தினிக்கக் கூடாது. இந்த உத்தேச கட்டண விகிதத்திற்கு மாநில அரசு அனுமதி அளிக்கக்கூடாது என்று கட்சியின் பிரதேசக்குழு புதுச்சேரி முதல்வரை வலியுறுத்தியுள்ளது.