சென்னை:
அரசை விமர்சித்துப் பேசியதால் வருமானவரி சோதனை என்றபெயரில் நடிகர் விஜய்யை மிரட்டும்செயலுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச்செயலாளர் எஸ்.பாலா வெளியிட்டுள்ளஅறிக்கை வருமாறு:
நடிகர் விஜய்யின் வீட்டில் மற்றும்அவரின் படக்குழுவினர் இல்லம்,அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர். பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடந்த இந்த சோதனையில் எந்தவொரு பணமோ ஆதாரமும் இல்லை என்று சோதனை செய்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிகில் திரைபடத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் வெளிப்படையாக அரசியல் சூழல்களையும், அரசியல் தலைவர்களையும் பற்றிய தனது கருத்தை தெரிவித்துள்ளார். இதைப் போன்று அவர்தனது கருத்தை தொடர்ந்து வெளியிடுவதை பொறுத்துக் கொள்ள முடியாத மத்திய அரசும், இதோடு ஒத்து ஊதக்கூடிய மாநில அரசும்ஒன்று சேர்ந்து இத்தகைய சோதனைகளை செய்துவருகிறது. அரசைப் பற்றி கருத்தைக் கூறியதாலேயே ரைடு என்ற தொனியில் மத்திய அரசு இத்தகைய செயலை செய்து வருகிறது. மேலும் அரசுக்குஎதிரான கருத்துக்களை யார் தெரிவித்தாலும் அவர்களின் மீது மத்திய பாஜக அரசு தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் வருமான வரித் துறையை ஏவிவிட்டு மிரட்டி வருகிறது. இதுபோன்ற அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மிரட்டப்படும் போது அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் எழுப்பிட முன் வரவேண்டும். நடிகர் விஜய்க்கு இந்தியஜனநாயக வாலிபர் சங்கம் உறுதுணையாக இருக்கும். தொடர்ந்து அவர் தனது கருத்துக்களை அரசியல்அமைப்புச் சட்டத்திற்கு உட்பட்டு சுதந்திரமாக பேசிட வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் இத்தகைய சோதனை நடவடிக்கைகளை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக்குழு வன்மையாக கண்டிக்கிறது.