சென்னை, மே 9- தமிழகத்தில் மறுவாக்குப் பதிவு நடைபெற உள்ள 13 வாக்குச் சாவடிகள் எவை, எதற்காக மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது என்பது குறித்து தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு விளக்கம் அளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு,“ 4 தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலுடன் வரும் 19ஆம் தேதி, 13 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது” என்றார்.தருமபுரியில் 8 வாக்குச்சாவடிகளில் நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்களிக்க முடியாத நிலை இருந்ததால் மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. திருவள்ளூர் மக்களவை தொகுதி, பூந்தமல்லி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட மேட்டுப் பாளையம் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடியில் மறுவாக்குப் பதிவு நடத்தப்படுகிறது. ‘மாக் போல்’ எனப்படும் மாதிரி வாக்குப் பதிவின் போது பதிவான வாக்குகளை அழிக்கத் தவறியதால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக அங்கு மறுவாக்குப்பதிவு நடைபெறுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.கடலூர் மக்களவை தொகுதியில் திருவதிகை பகுதியில் வாக்குச் சாவடி எண் 210ல் மறுவாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது. வாக்குப் பதிவு இயந்திரத்தின் ஒரு பட்டன் சரிவரத் தெரியாத நிலையிலிருந்ததால் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாதிரி வாக்குப் பதிவின்போது பதிவான வாக்குகளை அழிக்கத் தவறியதால் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, ஈரோடு மக்களவைத் தொகுதியில் காங்கேயம் பகுதியிலுள்ள எண் 248 வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு நடத்தப் படுகிறது.இதே காரணத்திற்காகவே, தேனி மக்களவைத் தொகுதி, ஆண்டிபட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச் சாவடி எண் 67-ல் மறுவாக்குப் பதிவு நடைபெறுகிறது. மின்னணு வாக்குப் பதிவு எந்திரத்தை மாற்றி வைத்ததில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, தேனி மக்களவைத் தொகுதியில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண் 197-ல் மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது என்றும் சாகு விளக்கம் கொடுத்தார்.ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் வாக்குப் பதிவுக்கு முன்னர் மாதிரி வாக்குப் பதிவு நடத்தப்படும். இந்த மாதிரி வாக்குப் பதிவை, வாக்கு எந்திரத்திலும், ஒப்புகைச் சீட்டு எந்திரத்திலும் நீக்கிய பிறகே உண்மையான வாக்குப் பதிவைத் தொடங்க வேண்டும். இதில் 46 வாக்குச் சாவடிகளில் தவறு நடந்ததாக அறிக்கை அனுப்பப்பட்டது. இதில் சரிசெய்ய முடியாத குளறுபடி நடந்த 3 வாக்குச் சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடத்தத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.