சென்னை:
வார ஓய்வுக்கு முந்தைய நாளில் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக போக்குவரத்து துறை முதன்மைச் செயலாளருக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளன பொதுச்செயலாளர் கே.ஆறுமுக நயினார் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியருப்பதாவது:
கொரோனா தொற்றின் இரண்டாவது அலையையெட்டி தமிழக அரசு சில தளர்வுகளுடன் ஊரடங்கை அறிவித்துள்ளது. அரசுப்பேருந்துகள் பகலில் இயங்கும் வகையில் உத்தரவிட்டுள்ளது. பொதுமக்கள் மத்தியில்பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு நிர்வாகம் உரிய பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு அறிவித்துள்ள நிபந்தனைகள் அடிப்படையில் பேருந்துகளை இயக்க வேண்டும். பேருந்துகளை சுத்தம் செய்வதோடு, தொழிலாளர்களுக்கு முகக் கவசம் உள்ளிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை நிர்வாகம் உறுதிப்படுத்த வேண்டும்.
சில இடங்களில் பயணிகள், நடத்துனர்கள் கூறுவதை மீறி அதிகமான அளவில் ஏறும் நிலை ஏற்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் பிரச்சனை ஏற்படாமல் இருக்க, பேருந்து நிறுத்தங்களில் காவல்துறை மற்றும் கழக ஊழியர்கள் மூலம் பயணிகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.தொழிலாளர்கள் தடுப்பூசி (கோவிட்-19) போட்டுக் கொள்ள நிர்வாகம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இது சம்பந்தமாக பணிமனைகளில் விளம்பரப்படுத்த வேண்டும்.கொரோனா தடுப்பூசி போட்ட பின்பு பலருக்கு சிறிய தொந்தரவுகள் வர வாய்ப்புள்ளது என மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். எனவே தடுப்பூசி போட்ட பின்பு ஒரு நாள்ஓய்வு அவசியம். தற்போது தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் வார ஓய்வு வழங்கப்படுகிறது. இதனால் நாளொன்றுக்கு சுமார் 3000 பேருக்கு வார ஓய்வு கிடைக்கிறது.எனவே, வார ஓய்வு உள்ள தொழிலாளர்களது பட்டியல் அடிப்படையில், வார ஓய்வுக்கு முந்தைய நாள் தடுப்பூசி போடுவதற்கான முகாம் நடத்த வேண்டும். தடுப்பூசி போட்டுக் கொண்ட தொழிலாளிக்கு ஒருநாளைக்கு மேல் பக்கவிளைவுகள் இருந்தால்அதற்குரிய விடுப்பையும் நிர்வாகம் வழங்கவேண்டும்.இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.