tamilnadu

வேலூர் முக்கிய செய்திகள்

பீடி தொழிற்சங்க தலைவர் காலமானார்


வேலூர். ஏப். 21-ஆற்காடு தொகுதி பீடி தொழிற்சங்க செயலாளர் (சிஐடியு) மாசிலாமணி (72) காலமானார்.ஆற்காடு பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி சனிக்கிழமை இரவு உடல்நலக் குறைவால் காலமானார். ஆற்காடு முன்னாள் தாலுக்கா குழு உறுப்பினராகவும், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வந்தார். மறைந்த மாசிலாமணி உடலுக்கு சிஐடியு மாவட்டச் செயலாளர் என்.காசிநாதன், மாவட்டத் தலைவர் எம்.பி. ராமச்சந்திரன், நாகேந்திரன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.சக்திவேல், காத்தவராயன், மாவட்டக் குழு உறுப்பினர் டி.சந்திரன், தா.வெங்கடேசன், தாலுக்கா செயலாளர் செல்வம், ஆறுமுகம், குமார் கோதண்டராமன், மனோகரன் உள்ளிட்ட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.மாசிலமணிக்கு காந்திமதி என்ற மனைவியும், குமரன், தன்ராஜ், என்ற மகன்களும், செல்வி என்ற மகளும் உள்ளனர்.  


மின் கம்பியை மிதித்த மாணவன் உடல் கருகி பலி


வேலூர், ஏப். 21-வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த கோடேரிபாக்கம் புதூரைச் சேர்ந்தவர் ரவி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகன் கதிரவன் (17). இவர் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றிருந்தார்.இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை கதிரவன் தங்கள் வயலுக்கு மாடுகளை ஓட்டிச் சென்றார் அப்போது அங்கே அறுந்து விழுந்து கிடந்த கம்பியை கதிரவன் தெரியாமல் மிதித்ததில், அவர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே பலியானார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை காவல் துறையினர் கதிரவன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  


48ஆவது தேசிய பாதுகாப்பு தின விழா


சிப்காட் தொழிற்பேட்டையில்


வேலூர், ஏப். 21-ராணிப்பேட்டை சிப்காட் தொழிற்பேட்டையில் இயங்கி வரும் மல்லாடி டிரக்ஸ்பார்மா சூட்டிகல்ஸ் நிறுவனம்சார்பில், 48ஆவது தேசிய பாதுகாப்பு தின விழாநடைபெற்றது.நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவில், சிப்காட் மல்லாடி டிரக்ஸ் குழுமத்தின் துணைத் தலைவர் ஆர்.ரவிச்சந்திரன் தலைமை தாங்கி உரையாற்றினார்.மேலாளர் (பாதுகாப்பு) ந.ம.ராமன் வரவேற்றார். தொடர்ந்து, உதவிப் பொது மேலாளர் ந.சங்கர் பாதுகாப்பு உறுதி மொழியை வாசிக்க அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.இதையடுத்து துணைப் பொதுமேலாளர் (உற்பத்தி) ரா.ரமேஷ் பாதுகாப்பு தினம் குறித்துப் பேசினார். விழாவில் வேலூர் மாவட்ட தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இணை இயக்குநர் மு.அ.முகமது கனி கலந்துகொண்டு, தொழிற்சாலையில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்துப் பேசினார். விழாவையொட்டி, நடத்தப்பட்ட பாதுகாப்பு விழிப்புணர்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற தொழிலாளர்களுக்குப் பரிசுகளை வழங்கினார். துணைப் பொதுமேலாளர் (மனித வளம்) ராஜசேகரன் நன்றி கூறினார். இதில், முதுநிலைப் பொறியாளர் (பாதுகாப்பு) க.ஆனந்த முரளி, மேலாளர் (மனித வளம்) மா.நவீன்குமார் உள்ளிட்ட பணியாளர்கள் கலந்து கொண்டனர்.