tamilnadu

img

விமான சாகச நிகழ்வில் 5 பேர் பலியான துயரம் உயர்மட்ட விசாரணை நடத்த அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்!

சென்னை, அக். 7 - விமான சாகச நிகழ்வைக் காண வந்த 5 பேர்  வெப்பவாத தாக்கத்தில் பலியான துயரச்  சம்பவம் தொடர்பாக உயர்மட்ட விசார ணைக்கு உத்தரவிடுவதுடன், உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி யுள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், தமது அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

5 பேர் பலியானது வேதனை

சென்னை மெரீனா கடற்கரையில், விமானப்படையின் சார்பில் நடைபெற்ற விமான சாகச நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க பல லட்சக்கணக்கானோர் கூடியுள்ளனர். அவ்வாறு பங்கேற்ற வர்களில் இரு நூற்றுக்கும் அதிக மானவர்கள் வெப்பத் தின் தாக்கத்தால் பாதிக்கப்பட்ட தாக வும், 93பேர்  மருத்துவ சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டுள்ள நிலையில், 5 பேர் உயிரிழந்துள்ள செய்தி வேதனை தருகிறது. அவர்களின் குடும்பங்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள் கிறது.

விடுமுறையால் கூடிய பல லட்சம் பேர்

விமானப்படை சாகச நிகழ்ச்சிகள் திட்ட மிடப்பட்ட அக்டோபர் 6-ஆம் தேதியானது- ஞாயிற்றுக்கிழமை, மேலும் பள்ளி விடுமுறைக்காலம் என்பதால் இந்த சாகச நிகழ்வுகளைக் காண லட்சக்கணக்கானவர்கள் குடும்பமாக கூடுவார்கள் என்பது எதிர்பார்க்கப்பட்டது. அதேபோல சுமார் 15 லட்சம் மக்கள் கூடி விமான சாகசங்களை கண்டுள்ளனர். காலை 10 மணி முதல் 1 மணி வரை கடுமையான வெயிலாக இருக்கும் என்பதால், அதற்கேற்ற முன்னேற்பாடுகள் செய்திருக்க வேண்டும்.

உரிய வசதிகள் செய்து தரப்பட்டதா?

உயிரிழப்புகளுக்கான காரணங்களை பற்றி பேசுகையில், “உரிய நேரத்தில் குடிநீர் எடுத்துக்கொள்ளாமல் அதனால் ஏற்பட்ட வெப்ப வாதம் உயிரை பறித்திருக்கலாம்” என்று கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசு, மருத்துவமனையில் 4 ஆயிரம் படுக்கை ஏற்பாடு செய்யப்பட்டு, மருத்துவர்கள் தயார் நிலையில் இருந்ததாக கூறியுள்ளது. இருப்பினும், வெப்ப வாத அபாயம் பற்றிய எச்சரிக்கை முன்பே விடப்பட்டதா? மக்கள் கூடி பார்வையிடும் இடங்களில் குடிநீர் வசதிகள் உரிய முறையில் செய்யப்பட்டதா? என்ற கேள்விகள் பொதுவாக எழுந்துள்ளன. எனவே, இதுதொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

இழப்பீடு வழங்க வேண்டும்

மேலும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கிடுவதோடு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தரமான உயரிய சிகிச்சை அளிக்க வேண்டுமெனவும், இனி வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காத வகையில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் குறிப்பிட்டுள்ளார்.