tamilnadu

img

மக்களிடம் பணம் பறிக்கும் காவல்துறையின் அடியாள்களா? எந்த சட்ட வரையறைக்கும் உட்படாத பிரண்ட்ஸ் ஆப் போலீஸை தடை செய்க....

சென்னை:
மக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் பணம் பறிக்கும் முறையில் செயல்படும் எந்த சட்ட வரையறைக்கும்  உட்படாத பிரண்ட்ஸ் ஆப் போலீஸை தடை செய்ய வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநிலச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தற்சமயம் தமிழகம் முழுவதும் காவல்துறையின் நண்பர்கள் (friends of police) என்ற பெயரில் ஒரு குழுவினர் காவல்துறையினருடன் இணைந்து தொடர்ந்து செயல்பட்டு வருகின்றனர்.அவ்வூரில் உள்ள குற்றங்களைப் பற்றி துப்புக் கொடுப்பதில் தொடங்கி வாகன சோதனை, வாகன பறிமுதல், கைது செய்வது என்று ஆரம்பித்து போலீசுக்கு தொண்டூழியம் செய்வது, சித்ரவதை செய்வது, வாகன ஓட்டிகள், கடைக்காரர்களிடம் மிரட்டி காசு பறிப்பது என வளர்ந்திருக்கிறார்கள் என்றால் எல்லாம் தரமற்ற தமிழக போலீசின் பயிற்சி தான் காரணமாகும்.சாத்தான்குளம் படுகொலைகளில் கூட போலீஸ் நண்பர்கள் குழுவிற்கும் பங்குள்ளதாக தகவல்கள் வருகின்றன. இது குறித்து உரிய விசாரணை செய்ய வேண்டிய பொறுப்பு தமிழக அரசுக்கு உள்ளது.  காவல்துறையினர் செய்ய வேண்டிய பணிகளை காவல்துறை நண்பர்கள் என்ற பெயரில் வேலையில்லாத இளைஞர்களைப் பயன்படுத்தி மேற்கொள்கின்றனர்.

காவல்துறை நண்பர்கள் குழுவில் இணைந்தால் எதிர்காலத்தில் காவல்துறையில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற நப்பாசையில் இளைஞர்களும் காவல்துறையின் சூழ்ச்சி வலையில் விழுகின்றனர். மேலும், ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சமூக விரோத அமைப்புகளில் செயல்படுபவர்களும்  குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் தங்களை காவல்துறை நண்பர்கள் குழுவில் இணைத்துக்கொண்டு தவறான முறையில் ஆதாயம்பெற்று வருகின்றனர். கிட்டத்தட்ட இந்த குழுவினர் காவல்துறையினரின் அடியாட்கள் போல பயன்படுத்தப்படுகின்றனர். இதுபோன்ற அமைப்புகளுக்கு எந்த சட்ட வரையறையும் இல்லாமல், காவல்துறையின் விருப்பப்படி காவல்துறை நண்பர்கள்என்ற பெயரில் இணைத்து செயல்படுவது என்பது இந்திய நாட்டின் அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும். 

இத்தகைய நிலையில், தமிழக அரசு உடனடியாக தலையிட்டு காவல் துறையின் கீழ் இயங்கக்கூடிய காவல்துறை நண்பர்கள் குழுவை (friends of police) உடனடியாக கலைக்க வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் வலியுறுத்துகிறோம். இல்லையெனில் தமிழகம் தழுவிய போராட்டத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்தும்.இவ்வாறு அதில் தெரிவித்துள்ளனர்.