tamilnadu

அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் போராட்டம் பொதுமக்களுக்கு கே.பாலகிருஷ்ணன் அழைப்பு

சென்னை, ஜன.26- நாட்டில் அனைத்து தரப்பு மக்களையும் பாதிக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தொடர்ச்சியாக போராட்டம் நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழ் நாட்டில் குடியரசு தினத்தன்று நூற்றுக்கணக்கான இடங்களில் உறுதி மொழி ஏற்பு இயக்கம் நடைபெற்றது.  இதன் ஒரு பகுதியாக, சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்திய அரசியலமைப்பின் முன்னுரையை வாசித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமையில்  உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இந்த இயக்கத்தை துவக்கி வைத்து பேசிய மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், “இந்தியா முழுவதும் மதச்சார்பற்ற அரசியல் சாசனத்திற்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்தில் நின்று போராடி வருகிறது” என்றார். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து இந்த இயக்கம் நடைபெற்றது.  இறையாண்மை, சமதர்ம நெறி, மதச்சார்பற்றத்தன்மை, மக்களாட்சி குடியரசின் உரிமைகளை  போதிக்கும் வகையில் துண்டு பிரசுரங்களை மக்களிடம் வழங்கும் பிரச்சார இயக்கமும் நடந்து வருகிறது என்றும் மத்திய பாஜக அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி ஓரணியில் திரட்டும் பணியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மேற்கொள்கிறது என்றும் கூறினார். பாஜக அரசின் இந்த மக்கள் விரோத சட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என 13 மாநில அரசுகள் உறுதியாக உள்ளன. குறிப்பாக கேரள அரசு சட்டமன்றத்தில் தீர்மானமே நிறைவேற்றியுள்ளது. தெலுங்கானா மாநில முதலமைச்சர் சந்திரசேகரராவ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எனவே, தமிழ்நாடு சட்டமன்றத்தில் எடப்பாடி அரசும் எதிர்ப்பு தீர்மானம் கொண்டு வரவேண்டும் என சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து போராடி வருவதையும் சுட்டிக் காட்டினார். இந்திய அரசியல் சாசனத்தை பாதுகாக்கும் எங்கள் போராட்டம் தொடரும் எனவும் தமிழக மக்கள் ஒற்றுமைமேடை சார்பில்  இம்மாதம் 30 ஆம் தேதி நடைபெறும் மனிதச்சங்கிலி போராட்டத்தில்  பெரும் எழுச்சியாக பங்கேற்கும் என்றும் கே.பாலகிருஷ்ணன் கூறினார். முன்னதாக உறுதியேற்பு நிகழ்வில் சிபிஎம் தென் சென்னை மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், தி.நகர் பகுதிச் செயலாளர் மூர்த்தி, மாவட்டக்குழு உறுப்பினர்கள் நந்தகோபால்,    எம்.ரங்கசாமி , தமுமுக, மனித நேயமக்கள் கட்சி நிர்வாகிகள் அபுபக்கர், முகமதுயூசுப், அப்துல் ரபீக் அகமது, சாதிக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்வைத் தொடர்ந்து பொது மக்கள், வணிகர்களை சந்தித்து துண்டு பிரசுரம் விநியோகித்தார்.