தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் தெற்கு அந்தமான் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அங்கிருந்து நகர்ந்து திங்கட்கிழமை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இதன் காரணமாகத் தமிழகத்தில் இன்று வரை ஓரிரு இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருப்பதாக ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறுகையில், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய தாய்லாந்து கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 15 ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக் கூடும். நவம்பர் 15-க்கு பிறகான 48 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று ஆந்திர கடற்கரையை நோக்கி நகரக் கூடும். ஆந்திர கடற்கரையை நோக்கி நகரும்போது தெற்கு ஆந்திரா, வடதமிழக கடலோரப் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.