தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் அசானி புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலிருந்து 970 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ள அசானி புயல் மணிக்கு 16 கி.மீ. வேகத்தில் நகரும். அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிர புயலாக உருமாறி வடமேற்கு திசையில் நகரக்கூடும்.
வட ஆந்திரா மற்றும் ஒடிசா கடற்கரை பகுதிகளில் மே 10 ஆம் தேதி அசானி புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மே 10 ஆம் தேதிமுதல் 12 ஆம் தேதிவரை தமிழகத்தின் வட மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
இதையடுத்து புயலின் நகர்வுக்கு ஏற்ப தமிழ்நாட்டில் தரைக்காற்று வீசும் திசையில் மாறுதல் ஏற்படும். அதனால் தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.