சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி 96ஆவது பிறந்தநாள் விழா மற்றும் தமிழக வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு பொதுக்கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திங்களன்று (ஜூன் 3) நடை பெற்றது.
கூட்டத்திற்கு திமுக பொருளாளர் துரைமுருகன் முன்னிலை வகித்தார். சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணியன் வரவேற்றார்.கே.பாலகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் சி.பி.எம் மாநிலச் செய லாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியதாவது:
நாசகர மோடி அரசு மீண்டும் அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் தமிழகம் அவர்களை மண்ணை கவ்வச் செய்துள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகளில் அதிக பட்சமாக 53 விழுக்காடு வாக்குகளை அளித்து இந்த கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்திருக்கிறார்கள். கடந்த இரண்டு ஆண்டுகளாக மக்களை திரட்டி போராடியதன் விளைவாக இந்த வெற்றியை நம்மால் பெற முடிந்தது. தமிழகத்தில் மோடியும், எடப்பாடியும் இணைந்து நடத்திய தாக்குதலை போராட்டங்கள் மூலம் தடுத்து நிறுத்தியுள்ளோம்.
இந்த கூட்டணியை வெற்றிகரமாக ஒருங்கிணைத்துச் சென்ற பெருமை மு.க. ஸ்டாலினுக்கு சேரும். 22 சட்டமன்ற தொகுதி களிலும் வெற்றி பெறுவோம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என நினைத்தோம், வாக்காளர்களும் நினைத்தார்கள். ஆட்சி மாற்றம் தற்காலிகமாக தள்ளிப் போய் உள்ளது, விரைவில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதிமுக ஆட்சிக்கு எதிராகஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 பேர் வாக்களித்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வர இருக்கிறது. அதன் மூலமும் ஆட்சி கவிழலாம் அல்லது அவர்களுக்குள் இருக்கும் உட்கட்சி பூசல் காரணமாகவும் ஆட்சி கவிழ வாய்ப்புண்டு. பணபலம், அதிகார பலம், சாதி பலம், மத பலத்தை எதிர்த்து மக்கள் வாக்களித்துள்ளனர்.
இதுவரை நிறுத்தி வைத்திருந்த மக்க ளுக்கு எதிரான எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன், இந்தி திணிப்பு ஆகிய திட்டங்களை பதவியேற்ற ஒரு வார காலத்திலேயே செய்யத் தொடங்கி விட்டனர். இந்த நடவடிக்கை களுக்கு எடப்பாடி அரசு காவடி தூக்குகிறது. இந்த ஆபத்துகளை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும். மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையில் இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்கிறார்கள்.
இந்திய கலாச்சாரத்தை, பன்முகத்தன்மை சீரழிக்க நினைக்கிறார்கள். மதச்சார் பின்மை, ஜனநாயத்தை சவக் குழியில் தள்ளப் பார்க்கிறார்கள். காஷ்மீர் மாநிலத்திற்கு உள்ள சிறப்பு அந்தஸ்த்தை நீக்கத் துடிக்கிறார்கள். காஷ்மீர் இந்தியாவுடன் இருக்குமா என்ற நிலைஏற்பட்டுள்ளது. மதவெறி சக்திகளுக்கு சாவு மணி அடிக்க தமிழகம் வழிகாட்டும்.
நாம் இன்று அடைந்த வெற்றி நாளை இந்தியாவை பாதுகாக்க பயன்படும். அம்பேத்கர் உருவாக்கிய அரசியல் சாசனத்தை பாதுகாக்க, தமிழக மக்களின் உரிமைகளை பாதுகாக்க தொடர்ந்து போராடுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.
கி.வீரமணி
திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், தமிழகத்தில் திராவிடம் வெற்றி பெற்று இருக்கிறது. இந்துத்துவம் தோல்வியடைந்துள்ளது. வட மாநிலங்களில் இந்துத்துவம் வெற்றி பெற்றிருக்கிறது. மோடி வித்தை செய்துதான் மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறார் என்றார்.
கே.எஸ்.அழகிரி
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ். அழகிரி பேசுகையில், இன்றைக்கு தேர்தலில் நமக்கு வெற்றியும், தோல்வியும் கிடைத்திருக்கிறது. தெற்கே வெற்றி பெற்றிருக்கிறோம். வடக்கே தோல்வி அடைந்திருக்கிறோம். சிறு நெருடல் கூட இல்லாமல் மு.க.ஸ்டாலின் இந்த கூட்டணியை அமைத்தார். இந்த மதச்சார்பற்ற கூட்டணி தொடர வேண்டும் என்றார்.
வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், தமிழக பள்ளிகளில் இனி இந்திக்கு இடமில்லை என்று சொன்னவர் அண்ணா.தில்லி இனி பின்வாங்கப் போவதில்லை. மத்திய அரசின் எல்லா துறைகளுக்கும் இந்தியில் பெயர். இந்தி திணிப்பை உருவகப்படுத்தும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையை தீயிட்டு கொளுத்துவோம். மத்திய அரசு தமிழகத்திற்கு வஞ்சகம் செய்கிறது.கோதாவரி, காவிரியில் தண்ணீர் வந்துவிடும் என்று ஏமாற்றுகிறார்கள். வந்தால் மகிழ்ச்சி, ஆனால் வராது ஹைட்ரோ கார்பன் போல நாசகர திட்டங்கள் மூலம் நம்மை அழிக்க திட்டமிட்டு விட்டது மத்திய அரசு என்றார்.
இரா.முத்தரசன்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசுகையில், தமிழ்நாட்டில் மதவெறிக்கு, சாதி வெறிக்கு ஆதரவு இல்லை என்பதை தமிழக மக்கள்
இந்த தேர்தலில் நிரூபித்துள்ளனர். மக்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக செயல்பட வேண்டும். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி எதிர்காலத்திலும் தொடர வேண்டும். சிறு பான்மையின மக்களை மடக்கி ஜெய்ஹிந்த், ஜெய் சிறீராம் எனக் கூறுமாறு இந்துத்துவ சக்திகள் மிரட்டுகின்றன. ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வரதுடிக்கும் மோடியை எதிர்க்க திமுக வாளாக இருந்து செயல்பட்டால் கூட்டணி கட்சிகள் கேடயமாக இருக்கும் என்றார்.
தொல்.திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசுகையில், கருணாநிதியைப் போன்று மு.க.ஸ்டாலினும் ராஜதந்திரி என்பதை நிரூபிக்கக் கூடிய வகையில் இந்த தேர்தல் வெற்றி அமைந்திருக்கிறது. இந்த தேர்தல் ஒட்டுமொத்த இந்திய தேசத்தையும் தமிழகத்தை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது. ஒரே தேசம், ஒரே கலாச்சாரம் என்ற முழக்கம் ஆபத்தானது. பன்முகத்தன்மையுடைய இந்திய நாட்டில் ஒரே கலாச்சாரம் சாத்திய மில்லை, பிற மதங்களையும், மொழிகளையும், அழிப்பதன் மூலம் தான் ஒரே நாடு ஒரே கலாச்சாரம் என்பதை கொண்டுவர முடியும். ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வர மோடி முயற்சிக்கிறார். இதை எதிர்த்து ஒன்றுபட்டு போராட வேண்டும் என்றார்.
காதர் மொகிதீன்
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் அகில இந்திய தலைவர் காதர்மொகிதீன் பேசுகையில், இராமநாதபுரத்தில் பிரதமர் பிரச்சாரம் மேற்கொண்ட போது இஸ்லாமியருக்கு வாக்களித்தால் தீவிரவாதிகளுக்கு அளிக்கிற வாக்கு என்கிற அடிப்படையில் பேசினார். அவ ருக்கு பதிலளிக்கும் வகையில் இது பெரியார், அண்ணா, காயிதே மில்லத் ஆகியோர் வாழ்ந்த மண் என்பதை அத்தொகுதி மக்கள் வெற்றியின் மூலம் நிரூபித்துள்ளனர் என்றார்.
எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா.எம்.எச்.ஜவாஹிருல்லா, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், உள்ளிட்ட கூட்டணி, தோழமை கட்சி தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.