tamilnadu

img

நூற்றாண்டு விழா காணும் எழுத்தாளர் வல்லிக்கண்ணன்!

சென்னை:
நவ.12 இல் துவங்கும் எழுத்தாளர் வல்லிக்கண்ணனின் நூற் றாண்டை ஓராண்டுக்கு சிறப்பாக கொண்டாட விழாக்குழு முடிவு செய்துள்ளது.ராஜவல்லிபுரம் கிருஷ்ணசாமி எனும் இயற்பெயர் கொண்ட வல்லிக்கண்ணன் தமிழின் சிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர். 1940 முதல் 2006 வரை தொடர்ந்து அறுபத்தைந்து ஆண்டுகள் எழுதி வந்தவர். புதுக்கவிதை,சிறுகதை, உரைநடை போன்ற தமிழ் வகைமைகளின் வரலாற்றை தமிழில் பதிவு செய்தவர் வல்லிக் கண்ணன். சரஸ்வதி காலம், தீபம் யுகம் என்று இலக்கிய இதழ்களின் வரலாற்றையும் தமிழில் பதிவு செய்தார். கதை, குறுநாவல், நாவல், கவிதை, கட்டுரை,மொழி பெயர்ப்பு, நாடகம், கடிதம் என பன்முகத்தோடு இயங்கியவர் வல்லிக்கண்ணன்.

மாக்சிம் கார்க்கியின் கதை,கட்டுரைகளையும்  டால்ஸ்டாயின் கதைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். கோரநாதன், சொக்கலிங்கம், மிவாஸ்கி போன்ற புனைப்பெயர்களில் அன்றைய சமூகப் போக்குகளை வல்லிக் கண்ணன் விமர்சித்திருக்கிறார்.இவர் எழுதி அன்னம் பதிப் பகம் வெளியிட்ட ‘புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும்’ நூல் 1978 ஆம் ஆண்டில் வல்லிக் கண்ணனிற்கு சாகித்ய அகாதமி விருதை பெற்றுத் தந்தது.1920-ல் பிறந்த வல்லிக்கண்ணனின் நூற்றாண்டு நவம்பர் 12 ஆம் தேதி தொடங்குகிறது. வல்லிக் கண்ணனின் நூற்றாண்டை ஓராண்டு முழுவதும் கொண்டாடுவதற்கான விழாக்குழு சென்னையை மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ளது.வல்லிக்கண்ணனின் தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள், வல்லிக் கண்ணன் குறித்த ஆய்வுப் பார்வை கொண்ட கட்டுரைத் தொகுப்பு, ஆவணப்படம் தயாரித்தல், சென்னை, புதுச்சேரி, கோவை, தஞ்சை, திருநெல்வேலி போன்ற இடங்களில் கருத்தரங்குகள் நடத்துவது, கல்லூரிமாணவர்கள் பங்கு பெறும் கட்டுரைப் போட்டிகள்,போன்ற முறைகளில் 2020 நவம்பர் முடிய நூற்றாண்டைக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.சிகரம் ச.செந்தில்நாதன் தலைமையில் திருப்பூர் கிருஷ்ணன்,ரவி சுப்பிரமணியன்,சந்தியா நடராசன், கடற்கரை, இரா.தெ.முத்து, பிரின்ஸ் கஜேந்திரபாபு, கோ.பழனி,இராம.குருநாதன்,புதுகை தர்மராசன், சீனி குலசேகரன்,ஆதிரா முல்லை, ஆண்டாள் பிரியதர்சினி, முகம் இளமாறன், பி.முருகவேள்,நடராசன், என படைப்பாளர்கள் செயற்பாட்டாளர்களைக் கொண்ட நூற்றாண்டு விழாக் குழு நூற்றாண்டு இவ்விழாவை திட்டமிட்டு வருகின்றது.