முது நகரில் டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து வாகனங்கள் எரிந்து சேதம் கடலூர், மார்ச்14- கடலூர் முதுநகரில் குருடாயில் ஏற்றி வந்த டேங்கர் லாரி மின்கம்பத்தில் மோதி விபத்து, லாரி தீப்பிடித்து எரிந்ததால் அங்கிருந்த வாகனங்களும் எரிந்து சேதம் அடைந்தது. மூன்று பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி பகுதியில் தனியார் நிறுவனத்தில் இருந்து சென்னைக்கு கச்சாஎண்ணை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி புறப்பட்டது. கடலூர் சுத்துகுளம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த வாகனத்தின் மீது மோதாமல் இருக்க பக்கவாட்டில் திரும்பிய பொழுது சாலையோரத்தில் இருந்த மின் கம்பம், மற்றும் மீன் லாரி மீதும் மோதி தீப்பற்றியது. மேலும் அந்த தீ இருசக்கர வாகனங்கள் மற்றும் 4சக்கர வாகனங்களுக்கும் பரவி அருகில் இருந்த கடைகளையும் தீக்கிரையாக்கியது. இந்த விபத்தில் டேங்கர் லாரி ஓட்டுநர் கங்காதரன், சம்பவ இடத்தில் இருந்த சூர்யா, காதர் மைதீன் உள்ளிட்ட 3 பேர் பலத்த தீக்காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் புதுநகர் பகுதியில் நிலவியது. இது குறித்து கடலூர் முதுநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் கழிவறையை சீரமைக்க கோரி மனு
விழுப்புரம், மார்ச் 14- விழுப்புரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கழிவறையை சரிசெய்ய வலியுறுத்தி வாலிபர் சங்கம் கோரிக்கை வைத்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் விழுப்புரம் வட்டக் குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் வளாகத்தின் உள்ளே இருக்கும் வட்டாட்சியர் அலுவலகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொதுக் கழிப்பறைகள் பராமரிப்பின்றி பயன்படுத்தமுடியாத நிலையில் உள்ளது. இதனை உடனடியாக சீர் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலரின் நேர்முக உதவியாளரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ்.பிரகாஷ் தலைமையில் விழுப்புரம் வட்ட குழு தலைவர் வழக்கறிஞர் யூ.மதன்ராஜ், வட்டக்குழு செயலாளர் ஜீவானந்தம், மற்றும் வட்டக் குழு உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.