tamilnadu

img

உச்சநீதிமன்றத் தீர்ப்பு பெரும் மகிழ்ச்சியளிக்கிறது – முதல்வர் ஸ்டாலின்!

பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

பட்டியலின, பழங்குடியினருக்கான உள்ஒதுக்கீட்டை மாநில அரசுகள் வழங்க முடியும் என்றும், அருந்ததியர் உள் இடஒதுக்கீடு தொடர்பான தமிழக அரசின் சட்டம் செல்லும் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், பட்டியலினத்தோர் உள் ஒதுக்கீடு தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

"ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான சமூக நீதியை நிலைநாட்டும் நமது பயணத்துக்கான மற்றுமோர் அங்கீகாரமாக இன்றைய உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

முறையாகக் குழு அமைத்து, அதன்மூலம் திரட்டப்பட்ட தரவுகளை அடிப்படையாகக் கொண்டு அருந்ததியர் சமுதாயத்திற்கான 3% உள்ஒதுக்கீட்டைத் தலைவர் கலைஞர் கொடுக்க, அதற்கான சட்ட முன்வடிவைப் பேரவையில் நான் அறிமுகம் செய்து, நிறைவேற்றித் தந்தோம். இந்தச் சட்டத்தை உச்சநீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு உறுதிசெய்திருப்பது பெருமகிழ்ச்சியளிக்கிறது." இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.