சென்னை:
கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகு குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையிலேயே பலர் உள்ளனர்.தமிழகத்தில் கொரோனா பரவலால் பள்ளி மாணவர்கள் தாங்கள் விரும்பியபடி பள்ளிக்கு சென்று படிப்பை தொடர முடியாத நிலை கடந்த ஓராண்டாக நீடிக்கிறது.கடந்த ஆண்டு பள்ளிக்கு செல்லாமலேயே 12 ஆம் வகுப்பைத் தவிர அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்ட போதிலும் இதனால் அனைத்து அரசு பள்ளி மாணவர்களும் முழுமையான பலன் பெறவில்லை.
தனியார் பள்ளிகள் மட்டுமே முறைப்படி ஆன்லைன் வகுப்புகளை நடத்தின. அரசு பள்ளிகளில் கல்வி தொலைக்காட்சி வாயிலாக பாடங்கள் நடத்தப்பட்டன.இந்தநிலையில் அரசு பள்ளிகள் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை தொடங்க பள்ளி கல்வித் துறை சார்பில் வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும் 37 ஆயிரம் அரசு ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 27 லட்சம் மாணவர்கள் வரை பயின்று வருகிறார்கள்.தற்போது கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் அடுத்த கல்வியாண்டுக்கான சேர்க்கையை நடத்துமாறு அறிவுறுத்தி இருந்த போதிலும் பெற்றோர்கள் அதில் போதிய ஆர்வம் காட்டாமலேயே உள்ளனர்.இதனால் மாணவர் சேர்க்கையில் மந்தம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் முடிவுக்கு வந்த பிறகு குழந்தைகளை பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளலாம் என்ற மனநிலையிலேயே பலர் உள்ளனர்.விரைவில் 12ஆம் வகுப்புக்கான மாணவர் சேர்க்கையை தொடங்கவும் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு எந்த அடிப்படையில் மதிப் பெண்களை வழங்குவது என்பது பற்றி கல்வித்துறை அதிகாரிகள் இன்னும் முடிவு எதுவும் அறிவிக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் குழப்பமான நிலையே நீடிப்பதாக பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
***********
.....தொடர்புடைய செய்தி....
பொதுத்தேர்வு: அமைச்சர் ஆலோசனை....
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடர் பாக, வரும் திங்கட்கிழமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்படுகிறது.