tamilnadu

img

நூலாற்றுப் படை வே.மீனாட்சி சுந்தரம்

மேனாள் நெல்லை மாவட்ட செயலாளர் வீ. பழனி எழுதி அ.ஆ.இ பதிப்பகம் வெளியிட்ட தாமிரபரணி தீரத்து சிறு கதைகளை படிக்க நேர்ந்தது. கதைகளின் களம்  நெல்லை மாவட்ட நகரமயமாகும். பழமையை விடமுடியாமல் தவிக்கும் கிராமங்கள். காலவெளி 20ஆம் நூற்றாண்டின் பின்பகுதி தொடங்கி இன்றுவரை உள்ள காலகட்டமாகும். 70கதைகளை கொண்ட இப்புத்தகம் நெல்லை மாவட்டத்து மக்களில் பழமையிலிருந்து விடுபட தவிக்கும் சமூக பிரிவினரின் வாழ்க்கையை உள்ளதை உள்ளபடி கூறுகிறது. எழுத்து நடை நெல்லை வட்டாரத் தமிழின் இனிமையை அறிய உதவுகிறது. 

வெளிப்படைத் தன்மையிலிருந்து குடும்ப உறவு அந்தரங்க வடிவமெடுக்க படும் சிரமங்களை இக்கதைகள் புனை வில்லாமல் சித்தரிக்கின்றன. கீழ்த்தட்டு மக்களின் குடும்ப உறவுகளில் ஏற்படும் மாற்றங்களை சுற்றிய கதைகளாகும். தெய்வ நம்பிக்கையிலிருந்து விடு பட்டு பணப்பட்டுவாடா உறவிற்கு மேல்தட்டுமக்கள் எளிதில் மாறி விட்டார்கள். ஆனால் கைவினைஞர்கள் மற்றும் குறு நில உடமையாளர்கள், விவசாயத்தில் நேரடியாக ஈடுபடுபவர்கள் ஆகியோரின் தவிப்பையும் மாறிய பிறகு ஏற்படும் மகிழ்ச்சியையும் சுவாரஸ்யமாக சித்தரிக்கினறன.

இக்கதைகள் அனைத்தும் அரசியலோ, தத்துவமோ எந்த சாயமும்  பூசாமல் உள்ளதை உள்ளபடி கூறுவன வாகும் . ஆனால் சம்பிரதாயங்கள், சாதிக்கட்டுப்பாடுகள், ஊர் சம்பிர தாயங்கள்  நம்பிக்கைகள் எவ்வாறு மாறு கின்றன அல்லது மாற்றப்படுகின்றன என்பதை உணர்த்திவிடுகின்றன. தமிழக கிராமங்களிலே எல்லா மானுட உறவுகளும் வெளிப்படையான வைகளே. “உலையை மூடலாம் ஊர்வாயை மூட முடியாது” என்பதை  70 கதைகளையும் படிக்கிற  பொழுது அறிய முடியும். மக்களின் அன்றாட வாழ்க்கை புனைவைவிட விநோதமானது என்பதை இந்த கதைகளை. வாசிக்கிறபொழுது உணரமுடியும். 70 கதைகளும் வாசகனை அசை போடவைக்கின்றன. அனைத்தையும் பதிவு செய்ய இயலாது.

அதில் சிலவற்றை அறிமுகம் செய்கிறேன். முதல்கதை கணக்குபாடம், 7ஆம் கிளாஸ் படிக்கிற பையன் கணக்குல  பெயில். அப்பா அடிக்க, பையன் வீட்டை  விட்டு ஓடிவிடுகிறான். தவிக்கிற பெற்றோ ர்கள் ஜோசியரிடம் கேட்கின்றனர். அவர் ஜாதகத்தை பார்த்துவிட்டு கணக்குல புலி நல்லாபடிப்பான் என்கிறார். கணக்குல பெயிலாகி அடித்ததால் ஓடிவிட்டான் என்று கூறிய பெற்றோர்கள், நம்பிக்கை இழக்காமல் அந்த ஜோசியரிடம் பையன்  என்ன ஆனான் என்று ஜாதகத்தை பார்த்து கூறுமாறு கேட்கின்றனர். பையன் வட திசை நோக்கி ஓடிவிட்டான்  என்று ஜோசியரும் குத்துமதிப்பாக கூற, அந்த (அப்பிராணி) அப்பாவி பெற்றோர்கள் சிறுவன் பாம்பே போயிருப்பான் என்று நிம்மதி பெறுகின்றனர். 

இதிலே மூன்றாவதாக வருகிற கதை “காலம் மாறுகிறது” என்ற தலைப்பில் உள்ளது. சாதிகெட்ட குடும்பத்தோடு பெண்ணை கொடுப்பது கொள்வது இயலாது. அது நடந்துவிடுகிறது. கதையின் முடிவில்தான்  எப்படி நடந்தது  என்பதை  ஒரு வரியில் கூறி முடிச்சை ஆசிரியர் அவிழ்க்கிறார். அதனை வட்டார மொழி நடையில் கதை கூறப்படுவதால் படிக்க சுவாரஸ்யமாக உள்ளது. தலைவர் வாழ்க என்றகதை சினிமா நடிகர்களை அரசியல் தலைவராக ஏற்கும் கிராமத்து இளைஞர்களின் மனோநிலையை படம் பிடிக்கிறது.

 சுவாமிநாதன் தேரு என்ற கதை சிறுவனுக்கு சிறு தேர் செய்து கொடுத்த ஒரு கைவினைஞரின் பெருந்தன்மையை குறிக்கிறது. கோவில் இன்றும் கைவினைஞர்களின் கலைத்திறனை பேணுகிற சரணாலயமாக இருப்பதை இக்கதை நாசுக்காக சு ட்டிக்காட்டுகிறது. அப்பாவின் பாசம் என்ற கதை.தேவர் சமூகத்தின் உட்பிரிவுகள் உண்டு திருமண உறவு வைக்கமுடியாது. அது மாறுவதை படம் பிடிக்கிறது.

 கீழ் தட்டு மக்களின் குடும்பங்களில்  பழைய குடும்ப உறவில்  பெண்ணின் அந்தஸ்தை பற்றிய உண்மையை சித்தரிக்கிற கதைகளில் சித்தி என்ற கதை சுவாரஸ்யமானது. தாழ்ந்த சாதிப் பெண் இரண்டாம் தரமாக மேல்சாதிக்காரனுக்கு வாக்கப்படுகிறாள். ஆனால் கணவன் வீட்டிற்கு போகாமல் வாழ்கிறாள். கணவன் இறந்துவிடுகிறான் ஊர் சம்பிரதாயப்படி அவள் வீட்டிற்குள் வந்து தாலியை வாங்கியபிறகே பிணத்தை அடக்கம் செய்யலாம். ஊர் பெரிசுகள் தாழ்ந்த சாதிப் பெண் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்று தடுக்கின்றனர். அதற்கு பின் என்ன நடக்கிறது என்பதை ஒருவரியில் ஆசிரியர் கூறி நம்மை வியக்க வைக்கிறார். பெண்களின் கட்டுப் பட்டிதனத்தின் எதார்த்த அடிப்படைகளை சுட்டிக்காட்டுகிற கதைகளில் கட்டிக்  கொடுப்பாங்க அல்லது இரண்டாம் தரமாக வாக்கப்படணும் இல்லை யெனில் ஊர்பழியை சுமக்கும் வாழவெட்டியாக வாழணும். என்ற அவலங்களை சித்தரிப்பவைகள் அதனை உடைக்கும் பெண்ணியக்கம் முளைவிடுவதை ஒரு கதை அழகாக சுட்டிக் காட்டுகிறது. கதையின் தலைப்பு “பொருள்முதல்வாதம்”    

இந்த கதைகளை படிக்கிற பொழுது எனக்கு 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த புகழ் பெற்ற பிரெஞ்சு எழுத்தாளர் பால்சாக் மற்றும். 20 நூற்றாண்டு அமெரிக்க எழுத்தாளர் எட்வர்டு ஹெமிங்கே எழுத்துப் பாணியை நினை வூட்டியது. ஒரு சமூகம் பழமையிலிருந்து நகர்ந்து புதிய கலாச்சாரத்திற்கு நத்தை வேகத்தில் நகர்வதை வரலாறால் உணர்த்த முடியாததை இக்கதைகள் காட்டுகின்றன. சினிமாக்களும் ஊடகங்களும் எதார்த்தங்களோடு தொடர்பற்ற புனைவுகளை பரப்புகிற இக்காலத்தில் இந்த கதைகள் புதிய பாதையை காட்டுகின்றன.

இதுவே உலகத் தர இலக்கிய படைப்பாகும். தமிழ் சமூகத்தின் தனித்துவத்தை பிற மொழியினர் அறிய உதவும் படைப்பாகும் 

 தாமிரபரணி தீரத்து கதைகள்!
ஆசிரியர் : வீ.பழனி, 
வெளியீடு : அ.ஆ.இ. பதிப்பகம்
பக்கங்கள் 416, விலை 300ரூபாய்