அதிகாரியிடம் மார்க்சிஸ்ட் கட்சி முறையீடு
சென்னை, ஜூன் 12- பாரதிதாசன் நகர், ராஜீவ்காந்தி நகரில் குடிநீர் குழாயில் கழிவு நீர் வருவது தொடர்பாக அப்பகுதி மக்கள் அதிகாரியை சந்தித்து முறையிட்டனர். சென்னை மாநகராட்சி, 146வது வட்டம், பாரதிதாசன் நகர், ராஜிவ்காந்தி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாய்களில் அண்மைக்காலமாக குடிநீருடன் சாக்கடை கலந்து வருகிறது. இதனையடுத்து வெள்ளியன்று (ஜூன் 12) சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்று வாரியம் 146வது வார்டு பனிமனை அதிகாரியை சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி செயலாளர் வி.தாமஸ், 146 ராஜிவ்காந்தி நகர் கிளை செயலாளர் ஆர்.சிங்காரம், 146ஏ ஸ்ரீலட்சுமி நகர் கிளை செயலாளர் ஜெ.பழனி மற்றும் பாரதிதாசன் நகர் மக்கள்முறையிட்டனர்.
குடிநீருடன் சாக்கடை கலந்து வந்த தண்ணீரை காட்டி கழிவு நீர் கலந்து வருவதை தடுக்க வேண்டும், லாரியில் கொண்டு வந்து தொட்டி மூலம் வழங்கப்படும் குடிநீரை தினசரி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அழைத்தால் உடனடி இணைப்பு என்ற பெயரில் வழங்கப்பட்ட கழிவுநீர் இணைப்பிற்கு 80 ஆயிரம் முதல் 1.20 லட்சம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்து வீடுகளுக்கு ரசீது அனுப்பப்பட்டுள்ளது. அந்த கட்டணத்தை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தினர். இவற்றை மனுவாக பெற்றுக் கொண்ட அதிகாரி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.