சாம்சங் தொழிற்சங்க பதிவு தொடர்பான வழக்கு நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத்தில் 1500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள், தங்கள் மீது சாம்சங் நிறுவனம் நடத்தும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராகவும், தொழிற்சங்கம் அமைக்கும் உரிமைக்காகவும் கடந்த செப்டம்பர் 9-ஆம் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு சிபிஎம், சிபிஐ, வி.சி.க, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு முதல்வர் உத்தரவின் பேரில் அமைச்சர்கள் தா.மோ.அன்பரன், சி.வி.கணேசன், டி.ஆர்.பி.ராஜா ஆகியோர் தொழிலாளர்களிடம் நடத்திய பேச்சு வார்த்தையில் எந்த உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்த நிலையில், சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தை பதிவு செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நாளை மறுநாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மஞ்சுளா முன்பு விசாரணைக்கு வருகிறது.