சென்னை, செப். 18- திருவொற்றியூர் மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் குடியிருப்புகளில் மழைநீர் புகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வட சென்னை திருவொற்றியூர் மேற்குப் பகுதியில் முல்லை நகர் ஜெய்ஹிந்த் நகர், கார்கில் நகர், ஜோதி நகர், சக்திபுரம் மதுரா நகர், சத்திய மூர்த்தி நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தெருக்கல் உள்ளன. இதில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் கழிவுநீர் அப்படியே தேங்கி நிற்கின்றன. மேலும் மழைக் காலத்தில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. குடியிருப்புகளில் மழைநீர் புகுந்து விடுவதால் அப்பகுதி மக்கள் அவதிப்படுகின்றனர். இது குறித்து சிபிஎம் திருவொற்றியூர்- எண்ணூர் பகுதிச் செயலாளர் எஸ். கதிர்வேல் கூறுகையில், ‘குடியிருப்பு களுக்குள் மழைநீர் புகுந்து விடாமல் இருக்க, கால்வாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்ய மண்டல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.