tamilnadu

img

பத்தாம் வகுப்பு தேர்வு ரத்து குறித்த அரசாணை உயர்நீதிமன்றத்தில் தாக்கல்

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து குறித்த அரசாணை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர்கள், கல்வியாளர்கள்,அரசியல் கட்சியினர் வலியுறுத்தினர்.  

தேர்வை ஒத்திவைக்கக் கோரி மாணவர் சங்கம், ஆசிரியர் சங்கம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் வினீத் கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் வழக்கு விசாரணையில் நீதிபதிகள், “தேர்வில் கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, பின் உயிருக்குஆபத்து ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பார்கள். மாணவர்கள் உயிரிழந்தால் இழப்பீடு வழங்குவதைத் தவிர, மாணவர்கள் உயிருக்குயார் உத்தரவாதம் அளிப்பார்கள். தேர்வை ஏன் தள்ளிவைக்கக் கூடாது. ஜூலை மாதத்தில்தான் பள்ளிகள் திறப்பதை ஆலோசிக்க வேண்டுமென மத்திய அரசு வழிகாட்டியுள்ள நிலையில் ஜூன் மாதத்துக்குள் ஏன் அவசரம் காட்டப்படுகிறது என்று அரசுத் தரப்புக்குக் கேள்வி எழுப்பினர்.இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, 11 ஆம் வகுப்புத் தேர்வை ரத்து செய்து அனைவரும் தேர்ச்சி என அறிவித்தார். இந்நிலையில் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு வியாழனன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது தொடர்பான அரசாணையை தமிழக அரசு தாக்கல் செய்தது. அதைப் பதிவு செய்த நீதிபதிகள் வினீத்கோத்தாரி, ஆர்.சுரேஷ்குமார் அமர்வு, இந்தியமாணவர் சங்க மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், ஈரோட்டைச் சேர்ந்த மாணவியின் தந்தை மாரசாமி, கடலூரைச் சேர்ந்த இளங்கீரன், தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் பக்தவச்சலம் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்குகளை முடித்து வைத்தனர்.