சென்னை:
மத்திய மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காரணமாக வட தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
“தற்பொழுது மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக கரூரில் 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.அடுத்து வரும் 24 மணி நேரத்தைப் பொறுத்தவரை வடதமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
எச்சரிக்கை
மன்னார் வளைகுடா, வடதமிழக கடலோரப் பகுதிகள், ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்றானது மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் 2 தினங்களுக்கு வீசக்கூடும் என்பதால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் அடுத்து வரும் 2 தினங்களுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.சென்னையைப் பொறுத்தவரை வானம் பெரும்பாலும் மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில பகுதிகளில் அவ்வப் போது லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்”.இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.