tamilnadu

img

தமிழகத்தில் 43,000 பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் கொள்முதல்

சென்னை:
கொரோனா நோயாளிகளுக்கு அதிகளவில் பயன்படுத்த 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டர்கள் கொள்முதல் செய்ய முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக, அமைச்சர் விஜயபாஸ்கர் ஞாயிறன்று (ஜூலை 12) வெளியிட்ட அறிக்கை:

கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமாகிறது. ஏனெனில் அவர்களின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் குறையும் போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு நோயாளிகள் உயிரிழக்கும் வாய்ப் புள்ளது. இதனை தவிர்க்கும் பொருட்டு நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை கணக்கிட பல்ஸ் ஆக்ஸிமீட்டர் (Finger Pulse Oximeter) என்ற கருவி பயன்படுத்தப்படுகிறது.தமிழ்நாடு முதல்வர் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்ட நபர்களுக்குரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவை வெகு எளிதாக அளவிட ஏதுவாக இக்கருவியை அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டுவர உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழ்நாடு மருத்துவப் பணிகள் சேவை கழகத்தின் மூலமாக 43 ஆயிரம் பல்ஸ் ஆக்ஸிமீட்டர் கருவிகளைக் தொள்முதல் செய்ய ஆணை வெளியிடப்பட்டு, இதுவரை 23 ஆயிரம் கருவிகள் தருவிக்கப் பட்டுள்ளன. மீதமுள்ள கருவிகள் ஓரிரு நாட்களில் பெறப்படும். தேவையின் அடிப்படையில் இக்கருவிகள் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும்.இக்கருவி, அறிகுறிகள் இல்லாமல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகளின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினைக் கண்காணிக்கவும், காய்ச்சல் சிகிச்சை மையங்கள், கோவிட் பராமரிப்பு மையங்கள், கோவிட் நல மையங்கள் மற்றும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ள நோயாளிகளின் ரத்தத்திலுள்ள ஆக்சிஜன் அளவினைக் கண்காணிக்கவும் அதிக அளவில் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.