சென்னை:
“பொன்மகள் வந்தாள்” திரைப்படத் தில் ஜனநாயக மாதர் சங்கத்தை தவறாக சித்தரிக்கும் காட்சியை நீக்குவதாக அத் திரைப்படத்தின் இயக்குநர் ஜனநாயக மாதர் சங்கத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை இப்படத்தில் சித்தரித்த விதம் சரியில்லை என்று பல மட்டங்களில் விமர்சனங்கள் எழுந்தன. மாதர் சங்க நிர்வாகிகள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஜனநாயக மாதர் சங்க செயற்பாட்டாளர் நிர்மலா ராணி, நீதிபதி சந்துரு மூலம் இந்த விஷயத்தை சூர்யாவுக்கு கொண்டு சென்றார். மாதர் சங்கமும், பல்வேறு சமூக செயல் பாட்டாளர்களும் எழுப்பிய இந்த விமர்சனம் சரிதான் என ஏற்றுக் கொண்டு, இயக்குனர் மூலம் இந்த கடிதம் வந்திருக்கிறது.
மன்னிப்பும் விளக்கமும்
இந்த நிலையில் மாதர் சங்கத்திற்கு இயக்குநர் ஜே.ஜே.ப்ரட்ரிக் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:பொன்மகள் வந்தாள் திரைப்படத்தில் குறிப்பிட்டதொரு காட்சியில் நாயகி நீதிமன்றத்திற்கு வரும் இடத்தில் பெண்கள் போராட்டம் செய்வதை முன்னிட்டு தோழர்கள் சிலர் கேள்வி எழுப்பியுள்ளனர். ஏய்ட்வா அமைப்பின் பெயர் பயன்படுத்தப்பட்டது, எங்களது கவனக் குறைவால் நடந்த ஒன்று. அதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை. அதற்காக தார்மீகமாய் மன்னிப்புக் கேட்பதோடு எய்ட்வா இயக்கத்தின் பெயரையும் லோகோவையும் உடனடியாக நீக்க முயற்சிக்கிறோமென உறுதியளிக்கிறோம். இந்தத் திரைப்படத்திற்கான கள ஆய்வில் அவர்களின் போராட்டங்களில் இருந்து நிறைய செய்திகளை எடுத்துக் கொண்டிருக்கிறோம். அந்தவகையில் அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.இவ்வாறு இயக்குநர் தெரிவித்துள் ளார்.விமர்சனங்களை காதிலேயே போட்டுக் கொள்ளாத சில தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் மத்தியில் பொன் மகள் வந்தாள் திரைப்படக் குழு, விமர்சனத்தை ஏற்றுக் கொண்டதோடு, அந்தக் காட்சியை சில நாட்களில் எடிட் செய்து சரி செய்வதாகவும் வாக்களித்துள்ளதை மாதர்சங்கமும் வரவேற்றுள்ளது.