tamilnadu

விளைநிலங்களில் பெட்ரோலியக்குழாய் பதிக்கக்கூடாது... விவசாயிகள் சங்க போராட்டத்தால் பணிகளை நிறுத்திவைக்க ஐடிபிஎல் நிறுவனம் ஒப்பந்தம்

சென்னை:
விளைநிலங்களில் குழாய் பதிப்பது கூடாது என்ற கோரிக்கையின் மீது அரசு முடிவெடுக்கும் வரை பணிகளை செய்ய அனுமதிக்க மாட்டோம் என்று வலியுறுத்தி நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் சங்க போராட்டத்தால் பணிகளை நிறுத்திவைக்க ஐடிபிஎல் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டம் இருகூர் முதல் பெங்களூர் தேவனகுந்தி வரை ஐடிபிஎல் நிறுவனம் பெட்ரோலிய குழாய் பதிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. விவசாய விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிப்பதை எதிர்த்து கடந்த ஓராண்டு காலத்திற்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி காவல்துறை மற்றும் வருவாய்த்துறையினரின் ஒத்துழைப்புடன் குழாய் பதிக்கும் பணியை ஐடிபிஎல் நிறுவனம் மேற்கொண்டது. இதை விவசாயிகள் ஒன்றுசேர்ந்து தடுத்து நிறுத்தினர்.

ஏற்கனவே, கெயில் நிறுவனம் விவசாயிகளுக்கு சொந்தமான விளை நிலங்களில் எரிவாயு குழாய் போட முயற்சித்த போது தொடர் போராட்டத்தை மேற்கொண்டனர். இதன் விளைவாக 2013 ஆம் ஆண்டு முதல்வர் ஜெயலலிதா சட்டமன்றத்திலேயே இத்திட்டத்தை ரத்து செய்து அறிவித்ததுடன் போடப்பட்ட குழாய்களை அப்புறப்படுத்தி நிலங்களை சமன்படுத்தி விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டுமென்று உத்தரவிட்டார்.இத்தகைய நிலையில், பெட்ரோலிய குழாய் பதிப்பதை விளை நிலங்களுக்கு பதிலாக சாலை ஓரமாக மாற்று வழியில் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற ஆலோசனையை சம்பந்தப்பட்ட நிறுவனம் ஏற்க மறுத்து பிடிவாதமாக விளைநிலங்களில் போட முயற்சித்து வருகிறது.

இதற்கெதிராக செப்டம்பர் 15 முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்துவதென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உட்பட ஐடிபிஎல் பெட்ரோலிய எண்ணெய் குழாய் திட்ட எதிர்ப்பு கூட்டியக்கத்தின் சார்பில் தீர்மானிக்கப்பட்டது. திருப்பூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய ஐந்து மாவட்டங்களில் இந்த போராட்டம் நடைபெற்றது. சுமார் 1000 விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்றனர்.திருப்பூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் போராட்டக் களத்திற்கே வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் வந்திருந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பேச்சுவார்த்தையில், விவசாயிகளின் விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்கக்கூடாது என்ற கோரிக்கையின் மீது அரசு முடிவெடுக்கும் வரை இத்திட்டம் தொடர்பான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று ஐடிபிஎல் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொண்டு எழுத்துபூர்வமான ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

நாமக்கல் மாவட்டத்தில் செப்டம்பர் 14 ஆம் தேதி இரவே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையொட்டி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது. சேலத்தில் எடப்பாடி தொகுதிக்குட்பட்ட ராயபட்டிணம் கிராமத்தில் போராட்டம் நடைபெறும் இடத்திற்கே விவசாயிகளை செல்லவிடாமல் வழிமறித்து அராஜகமான முறையில் காவல்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கைது செய்துள்ளனர். விவசாயிக்கு சொந்தமான இடத்தில் அமைதியான முறையில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்குக்கூட அனுமதிக்காமல் காவல்துறை கெடுபிடி செய்தது வன்மையான கண்டனத்திற்குரியது.

தமிழக அரசு, இப்பிரச்சனையில் தலையிட்டு விவசாயிகள் விளை நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்க அனுமதிக்க மாட்டோம் என்ற அறிவிப்பை முதலமைச்சர் வெளியிட வேண்டுமென்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்துகிறது. 
அம்மா வழியில் ஆட்சி நடத்துவதாக கூறும் தமிழக முதல்வர் அவர்கள் இந்த ஒரு பிரச்சனையிலாவது அதை உறுதியாக நிறைவேற்ற முன்வருமாறு கேட்டுக் கொள்கிறோம். அதிகாரிகள் உறுதியளித்துள்ளபடி, அதுவரை இத்திட்டம் தொடர்பான பணிகள் நடைபெறாமல் இருப்பதை அந்தந்த மாவட்ட நிர்வாகம் உறுதிப்படுத்திட வேண்டும். மாறாக, அடக்குமுறையை ஏவி திட்டத்தை நிறைவேற்ற முயற்சித்தால் நிலத்தின் மீதான தங்கள் உரிமையை நிலைநாட்டவும், விவசாயத்தை பாதுகாக்கவும் விவசாயிகள் ஒன்று திரண்டு அரசின் முயற்சியை தடுத்து நிறுத்துவார்கள் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.