சென்னை:
தமிழ்நாடு மாநில வாணிபக்கழகத்தின் மதுபான சில்லரை விற்பனைக் கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ரூ.500 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது ஏற்புடையதல்ல. காலமுறை ஊதியம் வழங்க முதலமைச்சர் பரிசீலனைசெய்திட வேண்டும் என்று டாஸ்மாக் ஊழியர் மாநிலசம்மேளனம் (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கைவருமாறு:
டாஸ்மாக் கடைகளில் 18 ஆண்டுகாலமாக தொடர்ந்து பணிபுரிந்து வரும் ஊழியர்களின் நீண்டகால கோரிக்கைகளில் பிரதான கோரிக்கை அரசு ஊழியருக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பதாகும். இதற்கு மாறாக இந்த அரசு தொகுப்பூதியத்தில் உயர்வு அறிவித்திருப்பது எந்தவிதத்திலும் நியாயப்படுத்த முடியாததாகும்.தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான நுகர்பொருள் வாணிபக்கழகம் (அமுதம் அங்காடிகள்), ஆவின் பார்லர், கோ-ஆப்டெக்ஸ், பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை கூடங்கள் என விற்பனை பிரிவுகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு ஊழியருக்கு இணையான ஊதியம் வழங்கப்படுகிறது. ஆனால் மது விற்பனை பிரிவு ஊழியர்களுக்கு தொகுப்பூதியமாக வழங்கப்படுவது மாற்றந்தாய் மனப்பான்மை கொண்டதாகும். இந்த விற்பனை பிரிவுகளை காட்டிலும் அரசுக்கு அதீத வருவாய் ஈட்டி தரும் ஊழியர்களின் நியாயமான, சட்டப்படியான கோரிக்கைகளை முந்தைய ஆட்சியாளர்கள் உதாசீனப்படுத்தினர். தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு சட்டமன்ற தேர்தலில் டாஸ்மாக் ஊழியர் மாநிலசம்மேளனம் ஊழியர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிக்க கேட்டுக்கொண்டதோடு மட்டுமல்லாமல் மாநிலம் முழுவதும் பிரச்சாரத்திலும் ஈடுபட்டது.
புதிய அரசு டாஸ்மாக் ஊழியர்களின் கோரிக்கைகளை நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றி அறிவிக்க சம்மேளனத்தின் சார்பில் கவனஈர்ப்பு பேரணி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அரசுடாஸ்மாக் நிறுவனத்தின் மூலமாக பேச்சுவார்த்தை நடத்தியதின் விளைவாக இந்த பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டு அரசுக்கு ஒத்துழைப்பு அளித்தது.செப்டம்பர் 7 ஆம் தேதி மதுவிலக்கு மானிய விவாத நாளில் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த ஊழியர்களுக்கு அமைச்சர் அறிவித்த ரூ.500 ஊதிய உயர்வு பெருத்த ஏமாற்றத்தையே தந்துள்ளது.
இடம் பெறாதவை
மேலும் அமைச்சர் சட்டப்பேரவையில் முன்வைத்த மானிய அறிக்கையில் இந்த அரசின் மதுவிலக்கு கொள்கை குறித்தான நிலைபாட்டை தெரிவிக்காமல் கடந்து சென்றிருப்பது சரியல்ல. தி.மு.க.தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்பதையும், மதிப்பூதியம்- தொகுப்பூதியத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிபவர்கள் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்ற வாக்குறுதிகளை சுட்டிக்காட்டுகிறோம். புதிய மதுக்கடைகளை திறக்க மாட்டோம்,பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கடைகளை மூடுவோம், கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைப்போம் என்பதே மறைந்த முன்னாள்முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அரசின் மதுவிலக்கு (2006) கொள்கை நிலைபாடாக இருந்தது. தற்போதைய அரசு இந்த நிலைபாட்டை தொடர்வது பற்றி மானிய அறிக்கையில் இடம்பெறவில்லை. மேலும் அவரது ஆட்சி காலத்தில்உயர்த்தி வழங்கப்பட்ட காப்புத்தொகைக்கான வட்டித்தொகை, ஊக்கத்தொகை உயர்வு, காலிஅட்டை பெட்டி விற்பனையில் கழிவு உள்ளிட்டவைமுந்தைய அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் கைவிடப்பட்டது. அதிமுக ஆட்சியில் கைவிடப்பட்ட பணப்பலன்களை மீண்டும் வழங்குவதற்கான எந்த அறிவிப்பும் அறிக்கையில் இடம் பெறவில்லை என்பதைகவலையுடன் சுட்டிக்காட்டுகிறோம்.
தெளிவுபடுத்தவில்லை
இந்த மானிய அறிக்கையில் தற்போது மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லரை விற்பனைகடைகளின் எண்ணிக்கை 5402 என்றும் அதனுடன் இணைந்த உரிமம் பெற்ற மதுக்கூடங்களின் எண்ணிக்கை 2808 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2594 மதுக்கூடங்களுக்கு உரிமம் கோரப்படவில்லையா, உரிமம் இல்லாமலேயே நடத்தப்படுகிறதா என்பதை குறித்தான தெளிவு இல்லை.மேலும் மதுபான சில்லரை விற்பனை கடைகளுக்கு 1750 குளிர்சாதனப்பெட்டிகள், 1520 எச்சரிக்கை ஒலி சாதனங்கள், 3 ஆயிரம் சி.சி.டி.கேமிராக்கள், 2825 லாக்கர்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குளிர்சாதனப்பெட்டிகள் கூட 7 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கப்பட்டவை, எச்சரிக்கை ஒலி சாதனங்களும் முந்தைய ஆட்சியில் வழங்கப்பட்டவை. அவை கூட செயலிழந்துள்ள நிலையிலேயே உள்ளன.அதனை தொடர்ந்து அனைத்து கடைகளுக்கும் தீயணைப்பு கருவிகள் மற்றும் மின்னணு விற்பனைகருவிகள் நிறுவப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரப்பகுதிகளில் உள்ள கடைகளுக்கு தீயணைப்புக் கருவி மற்றும்,பி.ஓ.எஸ். எனப்படும் ஆன்லைன் பில்லிங் மிஷின்கள்வழங்கப்பட்டுள்ளதே தவிர, மாநிலம் முழுமைக்கும் எல்லா கடைகளுக்கும் வழங்கப்படவில்லை என்பதேஉண்மையாகும். கடையின் அடிப்படை வசதிகளில் கூட முந்திய அரசு கவனம் செலுத்தவில்லை என்பதை சுட்டிக்காட்டுகிறோம்.
அக்கறையற்ற அதிகாரிகள்
முந்திய ஆட்சிக்காலத்தில் ஊழியர் நலனின் அக்கறை செலுத்தாத அதிகாரிகள் புதிய ஆட்சியிலும் தொடர்வதால் ஊழியர்களின் உணர்வுகளையும் எதிர்பார்ப்புகளையும் முறையாக அரசின் கவனத்திற்கு எடுத்து செல்லாததையே அமைச்சரின் அறிவிப்பு எடுத்துக்காட்டுகிறது.மேலும் இந்த மானிய அறிக்கையில் ஆயத்தீர்வை வரி மற்றும் விற்பனை வரி வகையில் வரும் வருவாய் மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது. மதுக்கூடங்கள் உரிமம் மற்றும் மதுக்கூடங்கள் மூலம் கிடைக்கும் மாதாந்திர ஒப்பந்தத் தொகை, காலி அட்டை பெட்டி விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய், ஊழியர்களுக்கு விதிக்கப்படும் அபராதம்,வட்டி, ஜிஎஸ்டி மூலம் கிடைக்கும் வருவாய், சேதமடைந்த மதுபாட்டில்களுக்கான இழப்புத்தொகை வகையில் டாஸ்மாக் நிறுவனத்திற்கு கிடைத்த வருவாய் குறித்தான விபரம் இந்த அறிக்கையில் இடம் பெறவில்லை.
பலிகடாவாக்குவதா?
மேலும் டாஸ்மாக் கடைகளின் விற்பனை நேரத்திற்கு பிறகு சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்பதற்கு மாறாக கடை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் கூறியுள்ளது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாகவே உள்ளது. அதுவும் இந்தசட்டவிரோத விற்பனையில் ஈடுபடுவோர் யார் யார்என்பதை நன்கு அறிந்த அமைச்சர் ஊழியர்களை பலிகடாவாக்குவது எந்தவிதத்திலும் நியாயப்படுத்தக்கூடியதல்ல.மேலும் பத்திரப் பதிவுத்துறையில் முந்திய காலத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணைமேற்கொள்ளப்படும் என்று அறிவித்துள்ள அரசு, டாஸ்மாக் நிறுவனத்தில் நடந்துள்ள பல்வேறு விதமான முறைகேடுகள், அதனால் அரசுக்கு ஏற்பட்டுள்ள வருவாய் இழப்புகள் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை கூட நிராகரித்துள்ளது இந்த அரசுக்கு பெருமை சேர்க்காது.புதிய அரசு பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை அமல்படுத்தி மக்களின் பேராதரவை பெற்று வரும் நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் இந்தஅரசின் மீது ஏற்பட்டுள்ள அதிருப்தியை கணக்கில் கொண்டு முதலமைச்சர் ஊதிய உயர்வை பரிசீலனை செய்து காலமுறை ஊதியம் வழங்க அறிவிப்பு செய்திட வேண்டும் என்றும் இதர கோரிக்கைகளை தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகாண முன்வர வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.