சென்னை:
மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிட தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் விடுத்துள்ள அறிக்கை:
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த போது தமிழக அரசின் சார்பில் கோரிக்கை மனுவை அளித்து பேசியுள்ளார். அக்கோரிக்கைகளில், இந்திய ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மின்சார திருத்த மசோதா 2020ஐ திரும்பப்பெற வேண்டுமென்றும் கோரியுள்ளார். தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த நடவடிக்கையை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வரவேற்கிறது.
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தித்தான் ஏறக்குறைய ஏழுமாத காலமாக தலைநகர் புதுதில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவையும், ஊக்கத்தையும் அளிக்கும்வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில்முதலமைச்சர் அவர்கள் இந்திய ஒன்றிய அரசின் பிரதமரிடம் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியிருப்பது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சுட்டிக்காட்டுகிறது. ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளின்சார்பில் முதல்வருக்கு வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம்.அஇஅதிமுக வேளாண் விரோத சட்டங்களுக்கு ஆதரவளித்ததன் மூலம் தமிழகத்திற்கு மிகப்பெரும் அவப்பெயரை ஏற்படுத்தியிருந்தது. அதை போக்கும் வகையிலும் தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு கொடுத்திருந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையிலும் தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கை அமைந்துள்ளது.
இதற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் நடைபெறவுள்ள சட்டமன்ற கூட்டத்தொடரிலேயே விவசாயிகளுக்கு விரோதமான மூன்று வேளாண் சட்டங்களையும் இந்திய ஒன்றிய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்திடவேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.