tamilnadu

img

சென்னையில் மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் இருமடங்கு உயர்வு

சென்னையில் உள்ள 7 மெட்ரோ ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னை பெருநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் வசதி கொண்டு வரப்பட்டது. மாநகர பேருந்து கட்டணங்களுடன் ஒப்பிடுகையில் மெட்ரோ ரயில் கட்டணம் மிகவும் அதிகம். இந்நிலையில், சென்னையில் உள்ள திருமங்கலம், அண்ணா நகர் கிழக்கு, அசோக் நகர், கிண்டி, மண்ணடி, நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம் ஆகிய 7 மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 

இரு சக்கர வாகனங்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 250 ரூபாயில் இருந்தது, தற்போது 500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.  அதே போல், விமான நிலையத்தில் உள்ள மெட்ரோ ரயில் நிலையத்தில், மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 500 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், கார்களுக்கு மாதாந்திர பார்க்கிங் கட்டணம் 3,500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட இந்த மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் பகுதி வேகமாக நிரம்பிவிடுவதாக தெரிவிக்கும் அதிகாரிகள், தேவை அதிகரித்துள்ளதால் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், மாதாந்திர கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால் வாகன நெரிசலை குறைக்கலாம். அதுமட்டுமல்லாது மாத கட்டணத்தை விட்டுவிட்டு விலை மலிவாக உள்ள தினசரி கட்டணத்தை மக்கள் பெற விரும்புவர் என்று தெரிவித்துள்ளனர். தினசரி கட்டணமாக வாகனத்தின் விதத்தை பொறுத்து ரூ.10 முதல் ரூ.40 வரை வசூலிக்கப்படுகிறது. பார்க்கிங் கட்டணம் மூலம் சென்னை மெட்ரோ நிர்வாகத்திற்கு சுமார் ரூ.1.9 லட்சம் வருவாய் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.