tamilnadu

img

என்.பி.ஆரும்., என்.ஆர்.சி.யும் ஒழிக்கப்பட வேண்டிய கொரோனா வைரஸ்கள் : நீதிபதி அரிபரந்தாமன்

சென்னை:
என்.பி.ஆர்., என்.ஆர்.சி. ஆகியவை கொரோனா வைரசை விட மிகக் கொடியவை; அதை ஒழிக்க வேண்டும் என முன்னாள் நீதிபதி து.அரிபரந்தாமன் கூறினார்.இதுகுறித்து து.அரிபரந்தாமன், கல்வியாளர் வசந்திதேவி, கர்நாடக இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணா ஆகியோர் சென்னையில் செவ்வாயன்று (மார்ச் 10) செய்தியாளர்களிடம் கூறியதாவது:இரண்டாவது விடுதலைப் போர் என்று சொல்லும் வகையில் நாடு முழுவதும், அரசியல் சட்ட விரோத சிஏஏ, என்.பி.ஆர்., என்.ஆர்.சிக்கு எதிராக பெரும் போராட்டங்கள்நடைபெற்று வருகின்றன. தமிழகத்தில் மட்டும் 50 இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேசம், கர்நாடகா, தில்லி, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நிகழ்ந்த வன்முறையால் சுமார் 80க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். மக்கள் மனதில் தங்கள் குடியுரிமை பறிபோகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

13 அரசுகளின் நல்லமுடிவு 
சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக 50 கோடி மக்களைப்  பிரதி நிதித்துவப்படுத்தும் 13 மாநில அரசுகள், மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன. அவர்களோடு இணைந்து தமிழக அரசும் என்.பி.ஆர்., என்.ஆர்.சி.யை அமல்படுத்த மாட்டோம் என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். சிஏஏ மட்டுமே மக்களவையில் இயற்றப்பட்ட சட்டம். என்.பி.ஆர்., என்.ஆர்.சி. அரசால் கொண்டு வரப்பட்டுள்ளன. இவை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமல்ல. சிஏஏவால் எந்த பாதிப்பும் இல்லை என பாஜக தொடர்ந்து தவறானதகவலை தெரிவிக்கின்றது. இந்த மூன்றுமே ஒன்றோடு ஒன்று தொடர்புடையவை.இதை தனித்தனியாக பார்க்கக் கூடாது. மேலும் இவை அரசியல் சாசனத்திற்கு விரோதமானவை. என்.பி.ஆரை அமல்படுத்தினாலே என்.ஆர்.சி. அமலாகிவிடும். இந்த சூழ்ச்சியை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

அசாமில் ஏற்பட்டது நாடு முழுவதும் ஏற்படும்
ஜனநாயக நாட்டில் மக்களின் குரலை கேட்க வேண்டியது அரசின் கடமை. மாநில சுயாட்சியை மதிக்கும் அதிமுக அரசு என்.பி.ஆரை அமல்படுத்தக் கூடாது. இதை இஸ்லாமியர்களின் போராட்டமாக மாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது. இது ஒவ்வொரு குடிமகனின் போராட்டம்.சுனாமி, கஜா புயல், சென்னை பெருவெள்ளம் போன்றவற்றால் பலர் தங்களது ஆவணங்களை இழந்துள்ளனர். அவர்கள் எப்படி அனைத்து ஆவணங்களையும் சமர்பிக்க முடியும்? குடியுரிமைச் சட்டத்தின் கீழான எந்த ஒரு கணக்கெடுப்பும் மக்கள் தங்கள் குடியுரிமையை நிரூபிப்பதை நோக்கித்தான் செல்லும். இதனால் அசாமில் ஏற்பட்ட பிரச்சனைகள் நாடு முழுவதும் ஏற்படும். இஸ்லாமியர்களை விட நாட்டில் பெரும்பான்மையாக வாழக் கூடியஇந்து மதத்தைச் சார்ந்த தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, மலைவாழ் பழங்குடி மக்கள் கோடிக் கணக்கில் பாதிக்கப்படுவர்.

எப்படி கணக்கெடுப்பு?
என்.பி.ஆரை அமல்படுத்தினால் ஜெர்மனி, மியான்மரில் நடந்ததைப் போன்ற மிகப்பெரும் மனித குலப் பேரழிவு நம் நாட்டிலும் ஏற்பட வாய்ப்புள்ளது. “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற பண்பாட்டின் வழிவந்த தமிழக மக்களின் அரசு, நிகழ இருக்கும் மனித குல பேரழிவைத் தடுக்க முன்வர வேண்டும். மேலும் 1948ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டத்தின்படி மட்டுமே கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.

முதல்வருக்கு வேண்டுகோள்
தமிழக முதல்வரை சந்தித்து தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்த இருந்தோம். ஆனால் முதல்வரின் பல்வேறு பணிகளால் அவரை எங்களால் சந்திக்க இயலவில்லை. எனவே தீர்மான முன்மொழிவை தமிழக அரசுக்கு பதிவுத் தபாலில் அனுப்பிவிட்டு, ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் வைக்கிறோம். இவ்வாறு  அவர்கள் கூறினர்.இச்சந்திப்பின் போது முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ., பஷீர் அகமது, வழக்கறிஞர் வாஞ்சிநாதன், நித்தியானந்த் ஜெயராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.