tamilnadu

img

கொடநாடு மட்டுமல்ல; இன்னும் பல இருக்கிறது.... முதல்வர் எச்சரிக்கை....

சென்னை:
கொடநாடு வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

சட்டப்பேரவை புதனன்று(ஆக.18) காலை 10 மணிக்கு கூடியதும், பேரவைத் தலைவரின் அனுமதியின்றி கொடநாடு விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசினார். பேரவைத் தலைவரின் அனுமதியின்றி அவர் பேசியது அனைத்தும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,“எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்கிற அடிப்படையில் பேசி ஒரு பிரச்சனையை கிளப்பியிருக்கிறார். கொடநாடு கொலை, கொள்ளை விசாரணை என்பது தேர்தல் வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றி வருகிறோம். வேறல்ல” என்றார்.நள்ளிரவு நேரத்தில் நடந்த அந்த கொள்ளைச் சம்பவத்தில் அடுத்தடுத்து நடந்த மரணங்கள், விபத்து மரணங்கள் அப்போதே மக்களிடம் சந்தேகத்தை ஏற்படுத்தியது. அதனால்தான் நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் விசாரணை செய்து உண்மை குற்றவாளிகள் சட்டத்தின்முன்பு நிறுத்தப்படுவார்கள் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதன்படி, நீதிமன்றத்தில் அனுமதிபெற்றுதான் விசாரணை நடைபெற்றுக்கொண்டி ருக்கிறது. எனவே, அதில் அரசியல் தலையீடோ, பழிவாங்குகிற எண்ணமோ நிச்சயம் இல்லை. உண்மை குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தார்.

அதனைத் தொடர்ந்து பேசிய பாமக தலைவர் ஜி.கே. மணி, பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “இது முன்னாள் முதலமைச்சர் மரணம் சம்பந்தப்பட்ட பிரச்சனை. தற்போது விசாரணை என்பது வேறுமாதிரியான முன்உதாரணத்தை ஏற்படுத்திடும் என்கிற அச்சம் உள்ளதால் வெளிநடப்பு செய்கிறோம்” என்று கூறினர்.இதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “தேர்தல் நேரத்தில் கொடுத்த உறுதிமொழி நிறைவேற்றவில்லை என கூறினீர்கள். அதில் ஒன்றுதான் இது. இன்னும் இதுபோன்று பல இருக்கிறது. அவைகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆகவே, வேறு யாரும் அதற்காக அச்சப்பட வேண்டியதும் இல்லை. இந்த அரசு சட்டத்தின் ஆட்சியை நடத்தும்” என்றும் முதலமைச்சர் கூறினார்.