தமிழகத்தில், காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் நடத்த இருந்த ஊர்வலத்திற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
தமிழகத்தில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்துவதற்கு காவல்துறையிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. இதற்கு தமிழக காவல்துறை அனுமதி மறுத்ததை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. அணிவகுப்பு நடத்துவதற்கான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டது. அதில், அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்கும் எவரும் சாதி, மதம் பற்றி தவறாகப் பேசக் கூடாது. காயத்தை ஏற்படுத்தக்கூடிய கம்பு, லத்தி அல்லது ஆயுதம் எதையும் கொண்டு செல்லக்கூடாது உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு பல்வேறு கட்சிகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. இந்நிலையில், வரும் அக்டோபர் 2-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கும், சமூக ஒற்றுமை நல்லிணக்க மனித சங்கிலி பேரணிக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மத உணர்வுகளை தூண்டும் பல நிகழ்வுகள் சமீபத்தில் தொடர்ந்து நடக்கும் சூழலில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எந்த அமைப்புக்கும் ஊர்வலம் மற்றும் கூட்டங்கள் நடத்த அனுமதி இல்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.